போராட்டங்களால் முடங்கியது ஹொங்கொங் விமான நிலையம் | தினகரன்


போராட்டங்களால் முடங்கியது ஹொங்கொங் விமான நிலையம்

ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்போராட்டத்தினால் நேற்றையதினம் விமானநிலையம் முடங்கியது. போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டமையால் சகல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.

உலகத்தில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையத்தின் சகல விமானங்களும் இரத்துச் செய்தமையால் பயணிகள் பலரும் திண்டாட்டத்துக்குள்ளாகினர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் விமான நிலையத்துக்குள் அமர்ந்து தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

'ஹொங்கொங் பாதுகாப்பானது இல்லை', 'பொலிஸார் குறித்து வெக்கமடைகிறோம்' போன்ற பொலிஸாருக்கு எதிரான கோஷங்களைத் தாங்கிய பதாதைகளுடன் போராட்டக்காரர்கள் விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் தொடங்கியது. போராட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஹொங்கொங் அரசு அந்தச் சட்டத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்தபோதும் போராட்டங்கள் இடைவிடாது முன்னெடுக்கப்படுகின்றன.

நேற்றுமுன்தினம் இரவு போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. நிலத்தின் கீழ் உள்ள ரயில் நிலையத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், இறப்பர் குண்டுத்தாக்குதல் நடத்தியும் கலைப்பதற்கு பொலிஸார் முயற்சித்தனர்.

இதனால் அந்தப் பகுதி போர்க்களம்போன்று காட்சியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது பெட்ரோல் குண்டுகளையும், செங்கற்களையும் வீசி எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையால் 45ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதுடன், இதில் இருவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'தீவிரப்போக்குடைய போராட்டகாரர்கள் பொலிஸாருக்கு எதிராக மோசமான முறையில் தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்த நிலைமை தொடர்ந்து வருவதுடன், மோசமான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. இதுவே பயங்கரவாதத்துக்கான ஆரம்ப சமிக்ஞையாக அமைந்துள்ளது'என ஹொங்கொங் ஸ்டேட் கவுன்சிலின் பேச்சாளர் யாங் குஆங் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...