வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கம் | தினகரன்


வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கம்

வடமாகாண குத்துச் சண்டை போட்டி

வடமாகாண குத்துச்சண்டை தகுதிகாண் போட்டியில் வவுனியா மாவட்டம் 3 தங்கப்பதக்கம் உட்பட 8 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மாகாண ரீதியில் நடைபெற்ற தகுதிகாண் குத்துச்சண்டைப் போட்டியில் குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளர் எம்.சுரங்கவின் மாணவர்களான வவுனியா மாவட்ட வீர, வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

91 கிலோவிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தையும், 81 கிலோவிற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தையும், 80 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் இரு வெண்கலப் பதக்கம் என ஆறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் வடமாகாணத்தின் சிறந்த குத்துச் சண்டை வீரராக வவுனியாவைச் சேர்ந்த எம்.நிக்சன் ரூபராஜ் தெரிவு செய்யப்பட்டதுடன் வவுனியா மாவட்ட ஆண்கள் குத்துச் சண்டை அணி மூன்றாம் இடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

பெண்கள் அணியில் 48 தொடக்கம் 50 கிலோ பிரிவில் வவுனியா மாவட்டம் தங்கப்பதக்கத்தையும், 60 கிலோ பிரிவில் பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...