கோட்டாபய ஜனாதிபதியானால் இராணுவ தலைவராகவே இருப்பார் | தினகரன்


கோட்டாபய ஜனாதிபதியானால் இராணுவ தலைவராகவே இருப்பார்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபயவுக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களிக்க மாட்டார்கள். இதனால் அவர் 30 சதவீத வாக்குகளை இழப்பார். அந்த வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்

பொது வேட்பாளர் ஒருவர்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறமுடியும். கட்சி வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்  ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை. 2005இல் கூட ஐ.தே.க ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவில்லை. மேற்படி இரண்டு தேர்தல்களிலும் பொதுவேட்பாளர் ஒருவர் வெளியில் இருந்தே வந்தார். சில நேரங்களில் வேட்பாளர் ஐ.தே.கவில் இருந்தும் வரலாம். வருபவர் யாராக இருந்தாலும் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வேண்டும். அதுதான் எமக்கு முக்கியம்

தமிழ்க் கூட்டமைப்புடன் நாம் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களே வடக்கு, கிழக்கு வாக்குகளை எமக்குப் பெற்றுத் தருவர். கிழக்கு முஸ்லிம் கட்சிகள்,மலையக தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றுடனும் நாம் பேசுவோம்

'ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடி தகுதி வாய்ந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்துவோம். அவர் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

எமக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"எங்களுக்கிடையே ஒற்றுமை நிலவுமானால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

 

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொள்ளும் உங்கள் பங்காளிக் கட்சிகள் எவை?

பதில்: தற்போது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புதிய அரசியல் கூட்டணியிலும் இடம்பெறும். இதில் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் அடங்கும். அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளும் கூட்டணியில் அமையும். தலைமைத்துவ சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 50 சத வீதம் என்ற வகையில் இடம் கிடைக்கும். அத்துடன் அதன் நிறைவேற்றுக் குழுவில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பிரதிநிதித்துவத்தை 50 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கொண்டிருப்பார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராக இல்லாத வாக்காளர்களைக் கவரவே இந்தக் கூட்டணி உருவாக்கப்படுகிறது. இந்தக் கூட்டணிக்கு புதிய பெயர் புதிய சின்னம், புதிய கொள்கை, கட்டமைப்பு ஆகியவையும் இருக்கும்.

 

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு சவால் விடும் அளவுக்கான திறன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளதா?

பதில்: அவர்களது கூட்டணியில் உள்ள சில சிறிய கட்சிகளுக்கு நாட்டில் எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அதனை விட பரந்துபட்டதாகும்.

 

கேள்வி: நீங்கள் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவீர்களா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவீர்களா?

பதில்: பொது வேட்பாளர் ஒருவர்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும். கட்சி வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை. 2005இல் கூட ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவில்லை. மேற்படி இரண்டு தேர்தல்களிலும் பொதுவேட்பாளர் ஒருவர் வெளியில் இருந்து வந்தார். சில நேரங்களில் வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் வரலாம். வருபவர் யாராக இருந்தாலும் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வேண்டும். அதுதான் முக்கியம்.

 

கேள்வி: தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் அகில விராஜ் காரியவசம், ருவன் ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் உங்களையும் சேர்த்து குழுவொன்றை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது உண்மையா?

பதில்: ஆம். ஆனால் அது தேல்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்கு அல்ல. அந்தக் குழு கொள்கைப் பிரசாரம் மேற்கொள்வதற்காகும். எமது தேரதல் பிரசாரத்தை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதே எமது கொள்கை பிரசாரத்தின் ஆரம்பப் பணியாகும். எமது எதிரணி வேட்பாளரை எதிர்கொள்ள எமது சார்பு அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதனாலேயே நாம் புதிய கூட்டணியை அமைக்கிறோம்.

 

கேள்வி: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்திருப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலமான சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சி) ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபயவுக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் வாக்களிக்க மாட்டார்கள். இதனால் அவர் 30 சதவீத வாக்குகளை இழப்பார். அந்த வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.

 

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் பரந்துபட்ட கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்களா?

பதில்: ஆம். இது பற்றி அவர்கள் எங்களுடன் ஏற்கனவே பேசியுள்ளனர். இதனால் பல மாற்றங்கள் ஏற்படும். இதனால்தான் மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது பற்றி நாம் பாராளுமன்றத்தில் பேசினோம். ஜனாதிபதியுடன் சார்ந்துள்ள சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் எம்முடன் கைகோர்க்கத் தயாராக உள்ளனர். இவர்களில் சிலர் கட்சி ரீதியிலும், சிலர் தனிப்பட்ட ரீதியிலும் எம்முடன் இணைந்து கொள்வர்.

 

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் கபிர் ஹாசீம் உள்ளிட்ட பலர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி கூட்டாகவே தெரிவு செய்யும். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெற்றி பெறும் வாய்ப்புடன் கூடியவர் எவரோ அவரை கட்சி தெரிவு செய்யும். எமது கூட்டணயில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டாகவே நாம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் அவர்களே வடக்கு,கிழக்கு பகுதி வாக்குகளை பெற்றுத் தருபவர்கள். அத்துடன் கிழக்கில் உள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஆகியோருடனும் நாம் கலந்து பேச வேண்டும். தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை நாம் ஒன்று கூடி கலந்து பேசி தெரிவு செய்வோம்.

 

கேள்வி: மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: நிச்சயமாக. நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம். எமது அணியில் ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானம் எடுப்பதாகக் கூறியுள்ளனர். இது பற்றி விளக்க முடியுமா?

பதில்: ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது அரசியல் தீர்மானமல்ல. அது மிகவும் பிரபலமான வேட்பாளரை மையப்படுத்தியது. எனவே முதலில் நாம் அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னரே மிகவும் பிரபலமான வேட்பாளர் யார். அவருக்கு உள்ள வெற்றிவாய்ப்புகள் என்னென்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

 

கேள்வி: கூட்டு எதிரணியின் ஒரு பிரிவினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயாராக இருப்பவர்கள் பலர் உள்ளனர். கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானால் அது இராணுவ அரசாங்கத்தைப் போல இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றனர். கடந்த முறை அவர் தேர்தல் ஏற்பாட்டாளர்களாக முன்னாள் இராணுவத்தினரையே நியமித்திருந்தார். அவரது பிரசாரங்களில் ஈடுபட்டவர்களும் இராணுவத்தினரே. எனவே அவர் தெரிவானால் அரசியல் தலைவராக இருக்க மாட்டார். இராணுவத் தலைவராகவே இருப்பார்.

 

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொது பெரமுன கட்சியும் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறதே அவ்வாறான கூட்டணி இடம்பெறுமா?

பதில்: எனக்குத் தெரிந்த வரை மேற்படி பரந்துபட்ட கூட்டணிக்கான பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது. சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைய விருப்பமில்லாமல் உள்ளதே இதற்குக் காரணம்.

 

கேள்வி: தற்போது தேவைப்படுவது வெறுமனே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் அல்ல, நாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடிய தலைவரொருவரே தேவைப்படுகிறார் என்பது பலரின் கருத்தாகும். உங்கள் கருத்து?

பதில்: அதுதான் எமது கருத்தும் விருப்பமும் ஆகும். எதிர்கால நோக்குடன் கூடிய நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லக் கூடியவரும், அனைவரையும் ஒற்றுமையுடன் வைத்திருக்கக் கூடியதுமான தலைவர் ஒருவரே எமக்கு இப்போது தேவைப்படுகிறார்.

கேள்வி: அடுத்து வரும் ஜனாதிபதி என்னென்ன விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சிரேஷ்ட அரசியல்வாதி என்ற ரீதியில் நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: முக்கிய விடயம் இனங்களுக்கிடையிலான தப்பான அபிப்பிராயங்களை களைதலாகும்.

அனைத்து சமூகங்களினதும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்க்கக் கூடிய வலிமை மிக்க தலைவராக அவர் இருப்பதுடன் அனைத்து சமூகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு உரிய கௌரவம் மதிப்பை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பது முக்கியமானதாகும்.

 


Add new comment

Or log in with...