உலக வனங்களின் மூத்த குடிகள் | தினகரன்


உலக வனங்களின் மூத்த குடிகள்

யானைகள் இன்றேல் காடுகளோ பிற உயிரினங்களோ உலகில் இல்லை

உலக யானைகள் தினம்

'இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை' என்றார் பிரிட்டிஷ் கவிஞர் ​ேஜான் டோன். ஆம், பார்கபே் பார்க்க சலிக்காத ஜீவன் யானை.

உலக யானைகள் தினம் நேற்று ஆகும். யானைகள் பற்றி பேச, எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை.

உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒன்று ஆசிய யானைகள்,மற்றொன்று ஆபிரிக்க யானைகள். ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இருக்காது.யானை பிறக்கும் போது சராசரியாக 200 இறாத்தல் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்குச் சமமானது.யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.ஆபிரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கு.

யானைகளுக்குப் பிடிக்காத ஒரு உயிரினம் தேனீ ஆகும்.மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையை விட யானையின் தந்தத்தில் அதிக சதை உள்ளது.யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.

உலக வனவிலங்கு நிதியத்தின் மதிப்பீட்டின்படி, உலகில் இப்போது 4,15,000 ஆபிரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகி வரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல்தான்.

யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக உலக யானைகள் தினம் வருடம் தோறும் ஓகஸ்ட் 12ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.ஆபிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காடுகளில் பயனற்ற தாவரங்கள் அதிகரித்துள்ளதால் யானைகளுக்கு தேவையான புற்கள், பசுமை உணவுகள் கிடைப்பது அரிதாகி விட்டது. பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வரட்சி போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் மக்கள் குடிமனைகளுக்குள் கூட்டமாக வருகின்றன. காடுகளை மனிதன் ஆக்கிரமித்து வருவதாலும் யானைகள் காடுகளை விட்டு வெளியேற வேண் டிய பரிதாபத்தில் உள்ளன. யானைகள் பழக்கமில்லாத ஆழமான பள்ளங்களில் விழுவது, ரயில் தண்டவாளங்களைக் கடப்பது, மின்வேலியில் சிக்குவது போன்றவற்றால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

யானைகளுக்கு தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ உணவு தேவை. இலைகள், மரப்பட்டைகள், புற்கள், மரக்குச்சிகளை அவை உண்கின்றன. 12 மணி நேரத்தில் இருந்து 18 மணிநேரம் உண்பதிலேயே நேரத்தைச் செலவிடுகின்றன. குடிப்பதற்கும், உடல் வெப்பத்தைத் தணிக்கவும் தினமும் 220 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகிறது. வரட்சி காலத்தில் இவை கிடைக்காத போது, குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.

யானைகளுக்கு மனிதர்களைப் போல் பாசம், அறிவாற்றல், பெருந்தன்மை, நினைவாற்றல், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து பாடுபடுதல் போன்ற அசாத்திய குணங்கள் உள்ளன. யானைகளை 'காடுகளின் தோட்டக்காரர்' என அழைக்கலாம். யானைகளின் சாணத்தில் முளைக்கும் திறன் பெற்ற விதைகளும், ஊட்டமான உணவுக் கழிவும் புதிய தாவரங்கள் முளைத்துக் காடுகளை வளமாக்க உதவுகின்றன. யானை, காடுகளில் இருந்து ஒரு பங்கு உணவைப் பெற்றால் பத்து பங்கு உணவு உற்பத்திக்குத் தேவையான மரம், செடிகளை உற்பத்தி செய்யும் வேலையை மறைமுகமாகச் செய்கிறது.

காடுகளின் மூத்த குடிகளான யானைகளுக்கு ஒவ்வொரு காட்டின் நீர்வளம் எங்கே இருக்கும் என்பது புரியும். கோடையில் யானைகளால் கண்டறியப்படும் நீரூற்றுகளே பிறவிலங்குகளின் தாகம் தணிக்கும் நீர்நிலைகள்.

யானை ஒரு முரட்டு விலங்கோ, கொடிய விலங்கோ அல்ல. மிகவும் மதிநுட்பம் வாய்ந்த விலங்கு. அதன் எல்லைக்கோட்டை அது நன்கு அறியும். பல நேரங்களில் காடுகளில் யானைகளை மனிதர்கள் எதிர்கொள்ளும் போது அது, தான் இருக்கும் இடத்தை மரத்தின் கிளைகளை உடைத்து எச்சரிக்கும்.

அதன் பிறகு நாய் குரைப்பதைப் போன்ற ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதையும் மீறி அருகில் செல்வோரை தாக்க வருவதைப் போல காதுகளை விரித்து வாலை சுருட்டியபடி நீண்ட பிளிறலுடன் ஓடி வரும். அப்போதும் மனிதன் அதை எதிர்க்கத் துணிந்தால் அவ்வளவுதான். நொடிப் பொழுதில் எதிர்ப்படுவோரை துவம்சம் செய்து விடும். அசாதாரணமாக இறுதி நொடியில் கூட பலரை

கொல்லாமல் விட்டு விடும் இரக்க குணமும் அதற்கு உண்டு.சமூக வாழ்க்கை முறை கொண்டவை யானைகள்.யானைகள் கூட்டத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் தலைவி, அதன் உறுப்பினர்கள் வழிநடத்திச் செல்லும். சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக யானைகள் விளங்குகின்றன. ஏனென்றால் யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும்.

காட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதில் யானைகளுக்கு முக்கிய பங்குண்டு. அதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலைக் காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது.காட்டில் பல கி.மீ தூரம் நடந்து செல்வதால் புதிய வழிப்பாதைகள் உருவாகின்றன.

உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காடுகள் உயிர்ப்போடு இருக்க யானைகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து, அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானைகளை மையப் படுத்தி Return to the Forest (வனத்திற்குள் திரும்பு) என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்தப் படம் 2012, ஓகஸ்ட் 12-ம் திகதி வெளியானது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


Add new comment

Or log in with...