வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்க்குமாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்


வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்க்குமாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

15 மாவட்டங்களைச் சேர்ந்தோர் தேர்தல்  ஆணையத்திற்கு முன்பாக அணிதிரள்வு

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களது பெயர்களை 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் சேர்க்குமாறு வலியுறுத்தி, இளைஞர் அமைப்புகள் தேர்தல் ஆணையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.  

நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் அமைப்புகள் கலந்துகொண்டன.  

இவ்வாண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் 2018ஆம் ஆண்டில் பதியப்பட்ட வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் எதிர்வரும் சில மாதங்களில் நடைபெறவுள்ளதால் உடனடியாக இந்த விடயத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியே இவ்வாறு இளைஞர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு பதியப்பட்ட தேர்தல் இடாப்புக்கமைய தேர்தல் நடத்தப்பட்டால் 300,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமது முதல் வாக்குப் பதிவை செய்வதற்கான வாய்ப்பை இழக்க நேரிடுமென்பதே இவர்களது பிரதான வேண்டுகோளாக இருந்தது.  

2019ஆம் ஆண்டு பதியப்படும் தேர்தல் இடாப்புக்கமைய தேர்தல்களை நடத்த நடவடிக்கையெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இளைஞர் அமைப்புகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தமைக்கு அமைய ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...