மஹிந்தவின் பதவிகள் குறித்து அடுத்த சபை அமர்வில் கேள்வி | தினகரன்


மஹிந்தவின் பதவிகள் குறித்து அடுத்த சபை அமர்வில் கேள்வி

சபாநாயகரிடம் முறையிடவும்  ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

ஸ்ரீலங்கா பெரமுனவின் தலைமை பதவியை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளமையால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகள் குறித்து அடுத்த பாராளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பவும் சபாநாயகரிடம் முறையிடவும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.   நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதுகுறித்து சுதந்திரக் கட்சித் தரப்பில் இதுவரை எவ்வித உறுதியான நிலைப்பாடுகளும் வெளியாகாத பின்புலத்திலேயே மகிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேள்விக்கு உள்ளாக்க ஐ.தே.க முடிவுசெய்துள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானிடம் வினவிய போது,  

“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கூட்டமைப்பின் சார்பாகவே அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.  

தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியொன்றின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர சட்டபூர்மாக இடம் இருக்கின்றது என்றால் அதனை சபாநாயகர் அறிவிக்க வேண்டும்.  

அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதுதொடர்பிலான முறைப்பாட்டை ஐ.தே.க முன்வைக்கும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...