அத்திவரதரை காண்பதற்கு இன்னும் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும் | தினகரன்


அத்திவரதரை காண்பதற்கு இன்னும் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

மூன்று நாட்கள் மட்டுமே

நாற்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்தப் பெருமாளை பக்தர்கள் தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட அபூர்வ கடவுளான ஆதி அத்திவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு இந்தாண்டு (2019) கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஓகஸ்ட் 1 முதல் நேற்றுடன் 12 நாட்களாக நின்ற கோலத்திலும் அத்திவரத பெருமாள் காட்சியளித்தார். கடந்த 42 நாட்களில் 85 இலட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை காண இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர் பெருவிழாவின் 43-வது நாளான நேற்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் பச்சை நிற சரிகை கலந்த பட்டாடையில் இராஜ மகுடம் சூட்டி, பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதரை காண அதிகளவிலான பக்தர்கள் காஞ்சியில் குவிந்தனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4.50 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பொது தரிசனத்தில் அத்திவரதரை காண 6 கி.மீ தூரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...