Thursday, April 18, 2024
Home » பாடகி பவதாரிணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் அனுதாபம்

பாடகி பவதாரிணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் அனுதாபம்

- பூதவுடல் இலங்கையிலிருந்து நேற்று சென்னை சென்றடைந்தது

by mahesh
January 27, 2024 8:36 am 0 comment

பின்னணிப் பாடகி பவதாரிணி மறைவுக்குத் திரைபிரபலங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், பவதாரிணியின் மறைவு வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்: அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோமுடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம்தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்.

நடிகர் விஷால்: இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ, வாசுகியின் உறவினராகவே உன்னை அறிந்ததைவிடவும்; உடன் பிறந்த சகோதரியாகவே நினைக்கிறேன். ஒரு நல்ல உள்ளம் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டது. கடந்த சில வாரங்களாகவே நான் விரும்பும் நபர்களை ஏன் இழக்கிறேன் என்று தெரியவில்லை.

சிம்பு: பவதாரிணியின் அந்தக் குரல் அனைத்து மக்கள் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும். இவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவார் என்று நினைக்கவில்லை. இளையராஜா குடும்பத்தினருக்கு இந்த மனவலியை தாங்கும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் தர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

வடிவேலு: பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல, தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையின் குரல் குயில் போல இருக்கும். அவர் மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் நொறுங்கி இருப்பார்கள். தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமான் காலடியில் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இளையராஜா தைரியமாக இருக்க எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரும் இசைஞானியுமான இளையராஜாவின் புதல்வி பவதாரிணி சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (25) இரவு இலங்கையில் காலமானார்.

இந்நிலையில், அவரது பூதவுடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று (26) மதியம் 1.45 மணியளவில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை சென்னையை வந்தடைந்த அவரது உடல் தியாகராய நகரில் (தி.நகரில்) உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சென்னையில்தான் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பிறகு ஆயுர்வேத சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன் இலங்கை  சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, தனது 47ஆவது வயதில் காலமானார்.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ எனும் பாடலை பாடியமைக்காக அவருக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமாகிய பவதாரிணியின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதுடன், அவரது மறைவையிட்டு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT