பேய்களைப் போல நாம் அலையும் வேளையில் பண்டிகை எதற்கு? | தினகரன்

பேய்களைப் போல நாம் அலையும் வேளையில் பண்டிகை எதற்கு?

ஹஜ் பெருநாளில் காஷ்மீர் மக்களின் வேதனை!

முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை (ஹஜ் பெருநாள்) நேற்று காஷ்மீரில் களைகட்டவில்லை. "இந்த ஆண்டு நாங்கள் பண்டிகையை தியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போதைக்கு எங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு எங்களது உயிர் மட்டுமே விட்டு வைக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து உரிமைகளும், அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டு விட்டன.இந்த முறை பக்ரீத் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது? யாருடன் கொண்டாடுவது" என்று ஸ்ரீநகரில் வசிக்கும் பலரும்வருந்துகிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று அங்கு களைகட்டவில்லை.

பாதுகாப்பை உறுதி செய்வதில், படையினருக்கு மிகப் பெரிய சவாலாக இது மாறியுள்ளது. அதே போல, பல கெடுபிடிகளுக்கு இடையே அமைதியான முறையில் இப்பண்டிகையை மகிழ்வோடு கொண்டாட முஸ்லிம்களால் முடியாமல் போய் விட்டது.

வழக்கமாக, இப்பண்டிகைக்கு ஒருசில நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். உறவுகளின் வீடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருக்கும். ஆனால், இம்முறை, உறவுகளை தொடர்பு கொண்டு அழைக்கவோ, விருந்து கொடுக்க செல்லவோ முடியாத நிலையில் இருந்தார்கள் காஷ்மீர் மக்கள்.

காஷ்மீரை விட்டு வெளியே படிக்கவோ, பணியாற்றவோ சென்றுள்ள மக்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட காஷ்மீர் திரும்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏராளமானோர் காஷ்மீர் திரும்பவில்லை. அப்படியே வர வேண்டும் என்று விரும்பினாலும், குடும்பத்தினரிடம் இருந்து வரும் பதில் வர வேண்டாம் என்பதாகவே இருந்தது.

கெடுபிடி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கூட தொழுகை நடத்த மிகக் குறைந்த மக்களே வந்திருந்தனர். கூட்டத்தால் நிரம்பும் மசூதிகள் வெறிச்சோடின.

இப்பண்டிகை பற்றி ஓட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் கேட்ட போது "எங்கள் சொந்த பூமியிலேயே நாங்கள் பேய்களைப் போல அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பக்ரீத் பண்டிகையின் போது காஷ்மீர் எப்போதும் இப்படி இருந்ததில்லை. அவ்வளவு ஏன், புர்ஹான் வானி 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட போது கூட இப்படி இல்லை.

19ம் நூற்றாண்டுகளில் பயங்கரவாதிகளின் கோரப்பிடியில் காஷ்மீர் சிக்கியிருந்த போதும் கூட. எதற்காக நாங்கள் இப்படி தண்டிக்கப்பட்டுள்ளோம்?" என்று வேதனையோடு பேசினார்.


Add new comment

Or log in with...