இலவச மருத்துவ சேவையின் பயன் முழுமையாக கிடைப்பது எப்போது? | தினகரன்


இலவச மருத்துவ சேவையின் பயன் முழுமையாக கிடைப்பது எப்போது?

இலங்கையின் மருத்துவ மற்றும் சுகாதார சேவையை உலகின் ஏனைய நாடுகளே போற்றிப் பாராட்டுவதுண்டு. இலங்கையைப் போன்று உயர் தரத்திலான மருத்துவ சேவையை வழங்குகின்ற வேறு நாடுகள் உலகில் எங்குமே கிடையாது.

இலங்கையின் எப்பிரதேசத்தில் வாழ்கின்ற எந்தவொரு பிரஜையும் தனக்கு ஏற்படுகின்ற வியாதியைக் குணப்படுத்திக் கொள்வதற்காக, எந்தவொரு அரசாங்க வைத்தியசாலையையும் இலவசமாக நாட முடியும். அவ்வைத்தியசாலை உயர்தரத்திலான மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்காத பட்சத்தில், அந்நோயாளி தீவிரமான வியாதிக்கு உட்பட்டிருப்பது தெரியவந்தால் அங்கிருந்து அம்பியூலன்ஸ் வாகனத்தில் அருகிலுள்ள தரமான மருத்துவ வசதிகள் கொண்ட வேறொரு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

அவ்வைத்தியசாலையிலும் தீவிரமான ஏதேனும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதி வாய்ப்புகள் இல்லாதிருப்பின். அந்நோயாளி கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட அரசாங்க வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுவதுண்டு.

அரசாங்க வைத்தியசாலைகளில் சில குறைபாடுகள் உள்ளனவென்பதை மறுப்பதற்கில்லை நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதில் சில வேளைகளில் ஏற்படுகின்ற தாமதம், சில மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்து போவது, வைத்தியசாலை வார்ட்டுகளில் ஏற்படுகின்ற இடநெருக்கடி, வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களால் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் போன்றவற்றை அங்கு அவ்வப்போது நிலவுகின்ற குறைபாடுகளாகக் குறிப்பிட முடியும்

ஆனாலும் அரசாங்க வைத்தியசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மருத்துவ சேவை வழங்கப்படாமல் நோயாளிகள் கைவிடப்படுவதில்லை தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற வேளையிலும் கூட அவசர நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுவதுண்டு. அவசர நோயாளர்களை வேறு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக நாட்டின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் உள்ளன.

இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்ற இலவசமான சேவைகள் ஆகும். நாட்டின் பெரும்பாலான மக்கள் அரசாங்க வைத்தியசாலைகளையே நம்பியிருக்கிறார்கள். தங்களது வியாதிகளை முடிந்தளவில் அவ்வைத்தியசாலைகளில் குணப்படுத்தியும் கொள்கிறார்கள். உதாரணமாக டெங்கு போன்ற சில வகை நோய்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற தரமான மருத்துவ சேவைகளை இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூற முடியும்.

இலங்கையின் அரசாங்க வைத்தியசாலைகளில் டெங்கு நோய்க்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகின்றது. தனியார் வைத்தியசாலைகளைப் பார்க்கிலும் டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் அரசாங்க வைத்தியசாலைகள் சிறப்பாக உள்ளதாக மக்கள் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகின்றது.

மாவட்டங்கள் தோறும் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலைகள் டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் போதிய கவனம் செலுத்துகின்றன. டெங்கு நோய்க்குள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை மிகவும் தரம் வாய்ந்ததாக விளங்குகின்றது. அங்கு கடமை புரிகின்ற வைத்தியர்களின் சேவையை மக்கள் பாராட்டுவதுண்டு.

அரசாங்க வைத்தியசாலைகளில் இக்காலத்தில் காணப்படுகின்ற மருத்துவ வசதிகள் ஏராளம் எனலாம். அதேபோன்று இலவச மருத்துவத்துக்காக அரசாங்கம் ஒதுக்குகின்ற நிதியும் அதிகம்.

இத்தனை வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் கூட, அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பிரதான குறைபாடுகளை இன்னும் முற்றாக களைய முடியாதபடியே உள்ளது. அதேசமயம் தனியார் வைத்தியசாலைகளை நோக்கி நோயாளர்கள் படையெடுப்பதையும் தவிர்க்க முடியாமலேயே உள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் தரமான மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். அங்கு சிகிச்சை ஏற்பாடுகளில் காலதாமதம் கிடையாதென்பது பொதுவான அபிப்பிராயம். தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்களிடமிருந்து அறவிடப்படுகின்ற பணம் பெரும் தொகையாகும். அவ்வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொண்ட பலர், தங்களது கட்டணத்தைச் செலுத்திக் கொள்வதற்காக நகைகள், காணிகள் போன்ற உடைமைகளை விற்றுக் கொண்ட சந்தர்ப்பமும் உண்டு.

தனியார் வைத்தியசாலைகளிலும் ஏராளமான குறைபாடுகள் நிலவுகின்றன. தவறான சிகிச்சை, சிகிச்சையில் காலதாமதம், வீணான கட்டணங்கள் என்றெல்லாம் அங்கும் குறைபாடுகள் உள்ள போதிலும், நோயாளர்கள் அங்கு படையெடுக்கவே செய்கிறார்கள்.

இலவச மருத்துவ சேவையில் இலங்கை சிறந்து விளங்குகின்ற போதிலும், தனியார் வைத்தியசாலைகளுக்குச் சென்று நோயாளர்கள் தங்களது பணத்தை வாரியிறைப்பதென்பது கவலை தருகின்ற விடயமாகும். அரசாங்க வைத்தியசாலைகளில் மருத்துவ சிகிச்சைகள் எதுவித குறைபாடுகளுமின்றி நிறைவாக இருக்குமானால், நோயாளர்கள் இவ்வாறு தனியார் வைத்தியசாலைகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது என்பதே உண்மை.

விசேட வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் பௌதிக வளங்களையெல்லாம் கொண்டுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் இருக்கையில், தனியார் வைத்தியசாலைகளை மக்கள் தொடர்ந்தும் நாடுவதென்பது அரசாங்க இலவச மருத்துவ சேவையிலுள்ள ஏதோவொரு பலவீனத்தின் வெளிப்பாடு என்பதே யதார்த்தமாகும்.

இக்குறைபாடுகள் முதலில் ஆராயப்பட வேண்டும். அக்குறைபாடுகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டாலேயே இலவச மருத்துவ சேவையின் முழுமையான பயனை நாட்டு மக்கள் அடைந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவர் பிற்பகல் வேளையில் தனியார் வைத்தியசாலையில் வல்லமைமிக்க மருத்துவராக எவ்வாறு மாற்றமடைகிறார் என்பதற்கான காரணம் மக்களுக்குப் புரியாததல்ல. இன்றைய காலத்தில் மனிதாபிமானத்தைப் பார்க்கிலும் பணத்துக்குப் பலம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. வறிய நிலையிலுள்ள நோயாளி ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் உபாதையை அரசாங்க வைத்தியசாலையொன்றில் குணப்படுத்திக் கொள்ள முடியாமல் தனியார் வைத்தியசாலையை நாடி அங்கு வருகின்ற மருத்துவ நிபுணரைச் சந்திக்க இரண்டாயிரம் ரூபாவை செலுத்தும் போது பணச் செலவு காரணமாக அவருக்கு ஏற்படுகின்ற மனத்துயரை யார்தான் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?


Add new comment

Or log in with...