மாற்றுத் தலைமையொன்றை ஜே.வி.பி களமிறக்குகிறது | தினகரன்


மாற்றுத் தலைமையொன்றை ஜே.வி.பி களமிறக்குகிறது

நாட்டை முன்கொண்டு செல்லக் கூடிய மாற்றுத் தலைவர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கவிருப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி கோல்பேஸ் திடலில் நடைபெறும் 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் மாநாட்டில் யார் வேட்பாளர் என்பது

அறிவிக்கப்படும் என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ முகாமினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேட்பாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவால் அறிவிக்கப்பட்ட மிகவும் பலவீனமான வேட்பாளர் என்றும் அவர் விமர்சித்தார்.

முற்போக்கான சக்திகள், கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை இணைத்து ஏற்படுத்தியுள்ள 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாத, வழக்குகள் இல்லாத, நாட்டை சிறப்பான முறையில் முன்கொண்டு செல்லக்கூடிய, ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத, மக்களுக்குத் தலைமைத்துவம் வழங்கக் கூடிய நபரே தமது வோட்பாளர் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மகாநாயக்க தேரர் மற்றும் பிற மதத் தலைவர்களின் ஒப்புதலுடன், ஒரு நேர்மறையான அரசியல் கலாசாரத்தை அடைவதற்குத் தகுதியான வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சர்வமதத் தலைவர்கள் இணைந்து யோசனையொன்றை முன்வைத்திருந்தனர். அவர்களின் யோசனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவற்றுக்கு உட்பட்ட ஒருவரையே வேட்பாளராக நியமிக்கவுள்ளோம்.

எனினும், மஹிந்த ராஜபக்‌ஷ முகாமினால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இவர்களால் அறிவிக்கப்பட்ட மிகவும் பலவீனமான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ விளங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எந்தவோர் அரசியல் கட்சிக்கும் நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை. எமது சார்பில் மாற்று வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார். தேசிய மக்கள் சக்தி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கே ஜே.வி.பி ஆதரவு வழங்கும் எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

 

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...