எதற்காகவும் அஞ்சமாட்டேன் | தினகரன்


எதற்காகவும் அஞ்சமாட்டேன்

மக்களுக்காக நடுவீதியில் உயிரை விடவும் தயார்

தாம் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் நாட்டு மக்களுக்காகத் தமது தந்தையைப்போல் நடுவீதியில் உயிரைவிடவும் தயார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று (12) பதுளையில் தெரிவித்தார்.

எதற்கும் அஞ்சாததால்தான் மக்களின் தோள்மீதேறி கூட்ட மேடைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நவம்பர் மாதம் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போவதாகவும் கூறினார்.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்று பதுளையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

"நான் எதற்கும் பயந்தவன் அல்லன். என்னுடனும், எமது கூட்டணியுடனும் இணையுங்கள் நாட்டை வெற்றியடையச் செய்யுங்கள் என்றார். மக்கள் எமக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பது சுகபோகம் அனுபவிக்க அல்ல. நாட்டு மக்களை பலப்படுத்துவதற்கேயாகும்" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த நேற்றைய கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர்கள் ரவீந்திர சமரவீர, ஹரீன் பெர்னாண்டோ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திராணி பண்டார, அஜித் பி.பெரேரா, இராஜாங்க அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, , வடிவேல் சுரேஷ், பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண, பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் முதலான தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சஜித் மேலும் உரையாற்றுகையில், "ஆங்கிலேயர்களைத் தோற்கடித்த இந்த ஊவா மண்ணிலிருந்து எமது புதிய பயணத்தை ஆரம்பிப்பதில் பெருமையடைகிறோம். நாங்கள் உருவாக்க நினைக்கும் புதிய பயணத்தில் 365 நாட்களும் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தை வழங்குவோம்.

ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமானது. அது பொது மக்களுக்குத் தற்காலிகமாக சேவை செய்ய வழங்கும் ஆணையாகும். நாட்டின் எதிர்கால பயணத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சியை கொண்டுசெல்ல வேண்டும்.

ஆட்சிசெய்யும்போது கனவுகளில் மிதக்காது நாட்டைச் சீக்கிரமாக முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். தகுதியுள்ளவர்களை இணைந்துக் கொண்டு அறிவுள்ள நபர்கள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

61 இலட்சம் குடும்பங்களுக்கும், 231 இலட்சம் மக்களுக்கும் தேவையான சக்தியை நாம் பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு முன்னுரிமையளித்து தேசிய பொருளாதாரத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளரர்கள்தான் பொருளாதாரத்தின் சக்தி. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தங்களை வலுப்படுத்துவதன் மூலம்தான் உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் பலமடைந்துள்ளன. சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை இலக்குவைத்து புதிய பொருளாதார பொறிமுறையொன்று உருவாக்கப்படும்.

இளைஞர்களிள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றி பயன்பெற வேண்டும். இளைஞர்களை கால்பந்துபோன்று பாவிக்காது நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக பயன்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வாய்ப்பளிக்க வேண்டும்.

செல்வந்தர்கள் மாத்திரம் வருமானத்தை அனுபவிக்கும் காலத்தை மாற்றி 231 இலட்சம் மக்களும் அனுபவிக்கும் நாட்டை உருவாக்குவோம். இதனைப் புதிய பயணமாக எண்ணுங்கள். புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த கொள்கைகளுக்கு அப்பால்பட்டு செயற்பட வேண்டும். 60,70 வருடங்களாக மக்களுக்கு எதிராக செயற்பட்ட பொறிமுறைமைகளை மாற்றி புதிய நாட்டை படைக்க இளைஞர் அபிவிருத்தி செயலணிகள் கிராமங்கள் தோறும் உருவாக்கப்படும். கிராமங்கள் ரீதியாக கைத்தொழில் பேட்டைகளையும் உருவாக்குவோம்

நமது நிருபர்


Add new comment

Or log in with...