நல்லிணக்கப்பாட்டுக்கு பெருநாள் வழிவகுக்கட்டும்! | தினகரன்


நல்லிணக்கப்பாட்டுக்கு பெருநாள் வழிவகுக்கட்டும்!

முஸ்லிம்கள் இன்று தியாகத் திருநாள் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரபு மண்ணில் கஃபா ஆலயத்துக்கு அருகில் இடம்பெற்ற தியாக வரலாற்றைக் கொண்டே ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்த தியாகத்தின் பின்னணியிலிருந்தே உலகம் நிறைய படிப்பினைகளைக் கற்றுக் கொண்டுள்ளது. உலக முஸ்லிம்கள் வரலாற்றின் நெடுகிலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.

எமது நாட்டிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட வண்ணமே வாழ்ந்து வருகின்றது. இறை சிந்தனையை, அல்லாஹ் குறித்த நம்பிக்கையை சரியாக விளங்கியவாறு தூய ஆகீதாவை உள்ளங்களில் பதித்துக் கொள்கின்ற கட்டாயத்தை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும். பல்லின சமூகங்களுடன் கலந்து வாழும் முஸ்லிம்கள் தமது விழுமிய வெளிப்பாடுகளை சரியான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும். முஸ்லிம் சமுகம் குறித்த நல்லெண்ணம் புரிதல்களை பெரும்பான்மை சமூகங்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இதில் ஒழுக்கக் கட்டுப்பாடு முக முக்கியமானதாகும், கட்டுப்பாடுகளோடு கட்டுக்கோப்பான சமூகமாக மாறும் போதுதான் சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்வது இலகுவாகின்றது. சமூக பொது ஒழுக்கவிதிமுறைகளுக்கும் விழுமியங்களுக்கும் கட்டுப்படுதல், நாட்டின் பொது சிவில் சட்டங்களுக்குக் கட்டுப்படுதல், சிவல் சமுக தலைமைகளுக்குக் கட்டுப்படுதல் மிக முக்கியமான ஒழுக்க விதிகளாகும் என்பதை மறந்து விடலாகாது.

மனித மனப்பாங்குகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மனிதனது நடத்தைக் கோலங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது. மனிதத்தை உணர்வதால் இன,மத,மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் சமநிலைக்கு இணைத்து விடும் காரியத்தை உருவாக்க முடிகிறது. பன்மைத்துவ நிதியதிகளின் உயர்வுக்கும் முரண்பாடுகளற்ற வாழ்வியல் நடைமுறைக்கும் வலுச் சேர்க்கும் வகையில் மானுட நேயம் கட்டியெழுப்பப்பட வேண்டும். பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் மனிதம் பற்றிய மனப்பாங்கு குறுகிய வட்டத்தோடு சுருங்கிப் போயிருப்பதையே காண முடிகிறது. இணைந்து வாழ வேண்டிய சமூகங்கள் பிளவுண்டு கிடக்கின்றன.

மனிதனை மனிதனாகப் பார்க்கும் மனப்பாங்கு சுருங்கிப் போயுள்ளதால்தான் சார்ந்த சிந்தனை வட்டத்திற்குள் இனங்கள் சிக்கியுள்ளன. பரந்த மனப்பான்மை இல்லாமை காரணமாகவே இனவாதம், மதவாதம் தலைவிரித்தாடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. மானுட நேயம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மானுட நேயத்தை கட்டியெழுப்பக் கூடிய புரிந்துணர்வை, இனங்களுக்கிடையே புரிதலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

தன்னைச் சாராத, தனது சிந்தனைக் கருத்துக்களுக்கு முரண்படுகின்றவர்கள் துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்ற போது அதில் இன்பம் காண முயல்வது சிறந்த பண்பாடல்ல.எந்தவொரு சூழ்நிலையிலும் வெறுப்புப் பேச்சுகளுக்கு வாய்ப்பளிக்கப்படக் கூடாது. கூடுதலான அளவுக்கு அனைவருடனும் இணங்கிப் போகும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் குறை காண்பதை விட தன்னை திருத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். இதுதான் சிறந்த மனிதப் பண்பாகும்.

உயர்வு, தாழ்வுச் சிந்தனையிலிருந்து விடுபட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நற்சிந்தனைகள் மனதில் பதிய வேண்டும். மானுட நேயத்துக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நல்லெண்ணம் வளராத வரை நல்லிணக்கம் சாத்தியப்பட முடியாது என்பதை உணர வேண்டும். வெறுப்புணர்வு முற்றாக களையப்பட வேண்டும். ஹஜ் உணர்த்தும் பாடம் இதுதான். மானுட இனத்தை நேசிப்பதை ஹஜ் போதனை வலியுறுத்துகின்றது. நபிகளாரின் அரபா பேருரை கூட இதனையே உத்தரவாதப்படுத்துகின்றது.

வீணான குதர்க்கவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மனித விழுமியங்களை கருத்தில் கொள்ளாமல் குதர்க்கவாதங்களில் ஈடுபடுவது அழிவுகளுக்கும், சகோதரத்தை இல்லாமல் செய்வதற்குமே வழிவகுக்கும். அபிப்பிராய வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் மோசமான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

அண்மைக் கால நெருக்கடிகளிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட முடியாத அவலத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது சமூகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பெரும் தடைக் கற்களாகக் காணப்படுகின்றன. சமூக முரண்பாடுகளை களைவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முரண்பாடுகளை நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அவை குதர்க்கமானவையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றுமத சகோதரர்கள் பார்த்து தவறாக விமர்சிக்கும் வகையில் ஒரு சமூகம் நடந்து கொள்ளலாகாது. புனித குர்ஆன் உணர்த்தும் பாடங்களையும், நபிகளாரின் போதனைகளையும் சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள முடியும். இந்த ஹஜ் பெருநாள் அந்த மனத்திடத்தை தரட்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுவதே நலம்.


Add new comment

Or log in with...