குணப்படுத்தக் கூடியதா ஒற்றைத் தலைவலி ? | தினகரன்


குணப்படுத்தக் கூடியதா ஒற்றைத் தலைவலி ?

உலகில் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் ஒற்றைத் தலைவலி (Migraine) ஒன்றாகும். உலகலாவிய ரீதியில் 14.7வீதத்தினர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 7பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது. உலக மக்கள் தொகையில் மிகவும் மோசமான ஒற்றைத் தலைவலியால் 2வீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த ஒற்றைத் தலைவலியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine), கண் நரம்பு ஒற்றைத் தலைவலி (Ophthalmoplegic Migraine), முக நரம்பு ஒற்றைத் தலைவலி (Facioplegic Migraine) என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.  

இந்நோயானது ஆண்களை விடவும் பெண்களைத் தான் அதிகம் பாதிக்கக் கூடியதாகும். குறிப்பாக 35முதல் 45வயதுக்கு இடைப்பட்டவர்கள் தான் இதன் பாதிப்புக்கு அதிக உள்ளாகின்றனர். பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு ஏற்படும் காலகட்டம், மெனோபோஸ் நிலையை அடையும் போது கருத்தடைக்காக ஹோர்மோன் மாத்திரைகள் பாவிக்கும் நேரம் ஆகிய சந்தர்ப்பங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.  

அறிகுறிகள்  

பொதுவாக ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அவரிடம் சில விஷேடமான அறிகுறிகளை அவதானிக்கலாம். குறிப்பாக 04முதல் 72மணி நேரம் வரை ஒரு பக்க தலைவலி நீடிக்கும். அத்தோடு சில அறிகுறிகளை வைத்து வலி வருவதை முன்கூட்டியே கண்டு கொள்ளலாம். திடீரெனச் சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போதல்(Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போதல் (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுதல் (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிதல் (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறத்தல், எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிதல் எனச் சில அறிகுறிகள் தென்படும். அதேநேரம் சிலருக்கு தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாகக் கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு ஏற்பட்டு சீராகும். அத்தோடு வாந்தி அல்லது குமட்டல் உணர்வும் காணப்படும்.  

காரணம் என்ன?  

இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட பல காரணிகள் துணைபுரிகின்றன. அவற்றில் அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவை மிக முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. அதேநேரம் உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் இரத்த ஓட்டம் தடைப்படும். இதன் விளைவாக அதன் இயக்கத்தில் மாறுபாடு ஏற்பட்டு தலைவலி உருவாகும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை காணப்பட்டாலும் உடலில் வெப்பம் அதிகரித்து தலைவலியை உண்டாக்கும்.  

உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை மாத்திரம் தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வோருக்கும் இப்பிரச்சினை ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.  

இரத்தக் குழாய்கள் விரிவடைவதாலும் வீங்குவதாலும் கூட வலி உண்டாகும்.

இச்சமயம் உடலில் நைதரசன் ஒக்சைட்டு அமிலம் அதிகளவில் சுரக்கும்.

அது, இரத்தக் குழாய்களைத் தூண்டும். இதன் விளைவாக குருதியில் 5-ஹைட்ரோக்சிடிரைப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற இரத்த ஓட்டத்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு வலி உணரப்படும். இதன் விளைவாக சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் தலைவலி வரலாம்.  

மேலும் பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருத்தல் என்பவும் இத்தலைவலிக்குக் காரணமாக அமைகின்றன.  

இவை இவ்வாறிருக்க, உடலின் வேறு பிரச்சினைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் பாவிப்போருக்கும் ஒற்றைத் தலைவலி ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமாகும். அதனால் தான் பல் துலக்கும் பற்பசைகளாலும், ஒற்றைத் தலைவலி வருவதாக அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  

மேலும் அணியும் ஆடைகளில் ஒட்டியிருக்கும் வாசனைத் திரவியங்கள், வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. சிலருக்கு சொக்லெட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடுதல் என்பவற்றினாலும் இத்தலைவலி ஏற்படலாம்.  

ஆகவே தலைவலி அடிக்கடி ஏற்படுமாயின் சாதாரணத் தலைவலி எனக்கருதி செயற்படக்கூடாது. இவ்வாறு ஏன் தலைவலி ஏற்படுகின்றது என்ற காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவென தகுதி வாய்ந்த மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, அறிவுரைகள் இன்றி தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகளைப் பாவிக்கக்கூடாது.  

ஏனெனில் சில வலி நிவாரண மருந்து மாத்திரைகள் உடலாரோக்கியத்திற்கு பாதிப்பாகவும் அமையலாம். அதனால் இவ்வாறான மாத்திரைகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த ஒற்றைத் தலைவலியானது, தீர்க்கவே முடியாத பிரச்சினை அல்ல.

அது ஓர் அறிகுறி மாத்திரம் தான். நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கை முறைமையை மாற்றிக்கொண்டால் ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம்.  

அதாவது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளல், பழைய பாலாடைக் கட்டி, உப்பு சுவை அதிகமுள்ள உணவு அல்லது பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மொனோசோடியம் சேர்க்கப்பட்ட உணவுகள், மது, அதிக கொபின் சேர்க்கப்பட்ட பானங்கள், அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள், சூரிய ஒளி, இரைச்சல், நுகரும் போது தாக்கங்களை ஏற்படுத்தும் வாசனைத் திரவியங்கள், வண்ணப்பூச்சுகள், புகைபிடிப்பவர்களுக்கு அருகில் இருத்தல், தேவையற்ற சிந்தனைகள் என்பவற்றைத் தவிர்த்தல், உள்ளத்தை அமைதியாக வைத்துக் கொள்ளல், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மையை சீர் செய்து கொள்ளல், உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளல் ஆகியன ஒற்றைத் தலைவலியைத் தவிர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும்.  


Add new comment

Or log in with...