ஐ.தே.க. சிறிகோத்த துப்பாக்கிச்சூடு; பொலிசார் விளக்கமறியல் | தினகரன்


ஐ.தே.க. சிறிகோத்த துப்பாக்கிச்சூடு; பொலிசார் விளக்கமறியல்

 
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் ஒருவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
மதுகம, மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிசார், சட்டஒழுங்கு அமைச்சரான சாகல ரத்நாயக்கவின், செயலாளரது பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.
 
மே தினமான நேற்று (01) சிறிகோத்தவில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிசார், கடமை நிமித்தம் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டு சிறிகோத்தாவில் நிர்மாணிக்கப்பட்ட ஐ.தே.க. வின் கட்சிச் சின்னமான யானை உருவ சிலையை சேதப்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து 40 வயதான குறித்த பொலிஸ் அலுவலர் கைது செய்யப்பட்டு, இன்று (02) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
குறித்த நபர் வேண்டுமென்றே குறித்த விடயத்தை மேற்கொண்டாரா அல்லது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை, குறித்த நபரை நீதிமன்ற அனுமதியுடன் மனநல மருத்துவர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
 
மிரிஹான பொலிசார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

Add new comment

Or log in with...