Friday, April 19, 2024
Home » எதிர்க் கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்தாலும் பொருளாதார மறுசீரமைப்பின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்

எதிர்க் கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்தாலும் பொருளாதார மறுசீரமைப்பின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்

- சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் நிகழ்வில் சாகல

by Rizwan Segu Mohideen
January 21, 2024 8:04 am 0 comment

எதிர்க் கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றும் போது சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் நேற்றுமுன்தினம் (19) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் முன்னேற்றத்திற்கு சட்டதையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியின் பாதுகாப்பிற்கும் சட்டமும் சமாதானமும் வலுவூட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சட்டம், சமாதானம் தொடர்பிலான வெளிப்படைத் தன்மை காணப்படுகிறது. அதற்கு அவசியமான மூலதனம், மனித வளம், தொழில்நுட்பம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. நாம் அதே நிலைக்குச் செல்ல வேண்டும்.

பொருளாதாரம் சரிவடைந்து கிடந்த நிலையிலேயே நாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். இரு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையை பலரும் மறந்துவிட்டனர். நாட்டுக்குள் எரிபொருள் வரிசை காணப்பட்டது. எரிவாயுவுக்கு வரிசை காணப்பட்டது. மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.

ஆனால் இன்று நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் இருந்தாலும் அடுத்த நாளை எவ்வாறு கடத்துவது என்ற கேள்விக்குரியான நிலைமை இல்லாமல் போயுள்ளது.

தற்போது நிலைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்திருக்கிறது. அதற்கமைய முதல் இரு வருடங்களும் நாட்டின்பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக செலவிடப்பட்டது. நாட்டு மக்களும் அதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்தனர். அந்த பயணத்தின் அடுத்த கட்டத்தையும் கவனமாகவே தொடர வேண்டும். நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளோம். சரிவடைந்த விவசாயத்துறையை மீள கட்டியெழுப்பும் வகையில் உரக் கொள்கைளை மாற்றியுள்ளோம்.

இவ்வாறான பல்வேறு பொருளாதார மறுசீரமைப்புக்களை நாட்டுக்குள் முன்னெடுத்துள்ளோம். அன்று 5சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை 16 சதவீதமாக அதிகரிக்கும் இயலுமை கிட்டியுள்ளது.

சுற்றுலாத்துறையை நாம் இலகுவாக அபிவிருத்தி செய்யலாம். இன்றளவிலும் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துள்ளது. 25 இலட்சம் சுற்றுலா பயணிகள் இவ்வருடத்தில் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா அபிவிருத்திக்காக அன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்று பலனளிக்கின்றன. அதனால் அந்நியச் செலாவணியும் அதிகமாக கிடைக்கிறது.

அதேபோல் துறைமுக அபிவிருத்து, இறங்குதுறை மற்றும் இடைமாற்ற சேவைகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்படுகின்றன. திட்டங்களுக்கு மேலாக நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது. கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

எமது நாட்டின் இளம் சமூகத்தினர் தொழில்நுட்ப துறையில் உயர்வான நிலையில் உள்ளனர். அதனூடான வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படுகிறன. எமது நாட்டுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆனால் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் நம்பிக்கை இல்லாதபோது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். நாடு மீண்டும் பொருளாதார சரிவைச் சந்திக்க இடமளிக்க கூடாது. எதிர்க்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கள், மக்களுக்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேசத்திற்கு எமது நாடு தொடர்பிலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது.

அதேபோல் நாடு முன்னேற்றம் அடையும் போது சமூகத்திலிருந்து போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தைப் பொறுப்பேற்க வேண்டிய இளம் சமூகத்தினர் போதைப்பொருள் பாவனையினால் அழிக்கப்படுகின்றனர். அதனை கண் முன்னே காண்கிறோம். அதற்காகவே “யுக்திய” முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை உலகத்தையே உலுக்குகிறது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதற்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிசார் உள்ளிட்ட பாகாப்புத் தரப்பினர் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர்.” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, சிரேஷ்ட அதிகாரிகள், சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT