மானிப்பாய் சம்பவம்; ஆவா குழுவின் மூவர் கைது | தினகரன்

மானிப்பாய் சம்பவம்; ஆவா குழுவின் மூவர் கைது

யாழ். மானிப்பாய் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆவா குழுவை சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி இரவு, 8.40 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பிரதேசத்தில் வீடுகள் சிலவற்றை தாக்கும் நோக்கில்  கூரிய ஆயுதங்களுடன் வந்த  ஆவா குழுவை சேர்ந்ததாக கூறப்படும்  உறுப்பினர்கள் சிலர், பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினரெனத் தெரிவிக்கப்படும் ஒருவர் உயிரிழந்ததோடு, ஏனையோர் தப்பிச் சென்றிருந்தனர். சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 02 வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று (22) பிற்பகல் 3.30 மணியளவில் சந்தேகநபர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (22) மாலை 6.00 மணியளவில்  மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சந்தேகநபர்களை, இன்று (23) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

 


Add new comment

Or log in with...