நாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது | தினகரன்

நாம் பலமாக இருந்தால் எங்களது காணிகளை மற்றவர்களால் கொள்வனவு செய்ய முடியாது

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்  க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் மக்கள் சந்திப்பு பாலர் பாடசாலைக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற போது மேற் கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம் காணிகள், பெண்கள், உரித்துக்கள் பறிபோகின்றது. இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. 

எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டு செல்கிறார்கள். நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால் எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏழ்மை நிலையில், வசதியற்ற நிலையில் இருந்தோமானால் மற்றவர்களின் சதிக்குள் செல்ல வேண்டிய நிலைவரும். தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். புதிய வாழ்க்கையை கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களை பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களை கூறி வளத்தினை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. 

இம் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுவேந்திரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்க உப செயலாளர் த.சிற்பரன் எனப் பலர் கலந்து கொண்டனர். 

கல்குடா தினகரன், பாசிக்குடா நிருபர்கள்   


Add new comment

Or log in with...