குழந்தைகளுக்கான நிறை உணவு தாய்ப்பால் | தினகரன்


குழந்தைகளுக்கான நிறை உணவு தாய்ப்பால்

உலகிலேயே விலை மதிக்க முடியாத பெறுமதிமிக்க ஓர் உணவு தான் தாய்ப்பால். அதற்கு ஈடாக எதுவித குழந்தை உணவுமே கிடையாது.இவ்வாறு சிறப்புற்று விளங்கும் இத்தாய்ப்பாலில் குழந்தையொன்று பிறந்ததைத் தொடர்ந்து தாய்க்கு முதலில் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாகப் பால் சுரக்கும். அதுவே சீம்பால் அல்லது கடும்பு தான் எனப்படுகின்றது. இதுவே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெற்றுக்கொள்ளும் முதல் உணவாகும். அதேநேரம் குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசியாகவும் இப்பால் விளங்குகின்றது. இப்பாலில் ‘இம்யூனோகுளோபுலின் ஏ’ எனும் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றது. குழந்தைக்குச் சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எவ்வித நோய்த்தொற்றும் ஏற்படாமல் இது பாதுகாக்கக்கூடியதமாகும். இப்பால் ஏனைய நோய்களை குழந்தைகள் தவிர்ந்து கொள்வதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கின்றது.  

இப்பாலுக்கு அடுத்தபடியாகச் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கொழுப்பு, குளுக்கோஸ், புரதம், விட்டமின் ஏ, சி, கல்சியம், பொஸ்பரஸ் உள்ளிட்ட எல்லாச் சத்துகளும் அடங்கியுள்ளன. மேலும், 7 – 8வீதம் கார்போஹைதரேட்டு, 87.47வீதம் தண்ணீர், 3.76வீதம் கொழுப்பு, 2.14வீதம் புரதம், 3.76வீதம் லாக்டோஸ், 0.31வீதம் தாதுக்கள் தாய்ப்பாலில் உள்ளன. விட்டமின் - டி மாத்திரம் தான் தாய்ப்பாலில் இல்லை.  

தாயுடனான பாசப் பிணைப்பு  

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெற்ற தாய்மார் மயக்கம் தெளிந்த பின்னர் தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் வழங்கப்படும் குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட வேண்டியதில்லை. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஏனைய அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மாத்திரம் தான் காணப்படுகின்றது.  

இதிலுள்ள லைசோசைம் எனும் என்சைம் நோய்க் கிருமிகளை அழித்து விடக்கூடியதாகும். அது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றக்கூடிய பண்பைக் கொண்டிருக்கின்றது.மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கக்கூடியதுமாகும்.

உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பல் வளர்ச்சி எனக் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தாய்ப்பால் தான் உதவும். அத்தோடு தாயுடனான பாசப் பிணைப்பு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம் தான் அதிகம் காணப்படும்.  

மேலும் தாய்ப்பால் வழங்கும் தாய்மாரும் பல நன்மைகளை அடைந்து கொள்கின்றனர்.

குறிப்பாக தாய்ப்பால் வழங்கும் போது கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவடையும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கு கட்டுப்படுத்தப்படும். மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவடையும். தாய்ப்பால் வழங்குவதன் மூலம் சுரக்கும் ஹோர்மோன்கள் காரணமாக தாயின் வயிறு சுருங்கி பழைய வடிவத்தைச் சீக்கிரத்தில் பெற முடியும்.  

குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் வழங்குவது முக்கியமானதாகும். குழந்தைக்கு 6மாதங்கள் கடந்த பின்னர் தான் தாய்ப்பாலுடன் தகுந்த துணை உணவுகளை வழங்க வேண்டும்.

அது வரைக்கும் தாய்ப்பாலை மாத்திரமே உணவாக வழங்க வேண்டும்.  

என்றாலும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நிறையப் பெண்கள் வேலைக்குச் செல்வதால், பலரும் 6மாதத்துக்குப் பிறகு தாய்ப்பால் வழங்குவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் வரையும் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும். அதன் காரணத்தினால் வேலைக்கு செல்லும் பெண்கள் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனையுடன் தாய்ப்பாலை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இவ்வாறான சூழலில் தான் உலக சுகாதார ஸ்தாபனம் தாய்ப்பால் ஊட்டுவது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்று அறிவித்துள்ளது. அதற்குக் கணவர், குடும்பத்தினரின் ஊக்குவிப்பு மிகவும் அவசியம். சமூகம் பணிபுரியும் இடத்தின் ஆதரவும் மிக அவசியம்.

போதிய பேறுகால விடுப்பும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் கொடுப்பது தாய்ப்பால் ஊட்டுவதை அதிகரிக்கும்.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மாருக்குப் போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளைக் கொடுப்பதும், போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதும், மன மகிழ்ச்சி நிறைந்த சூழலை அமைத்துக் கொடுப்பதும் குடும்பத்தினரின் கடமை என்பதையும் கூட உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி உள்ளது.

அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் முதல் 6மாதங்களுக்குத் தாய்ப்பால் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை 50வீதம் வரை உயர்த்துவதே இந்த ஸ்தாபனத்தின் தற்போதைய இலக்காக உள்ளது.  

ஆகவே தாய்ப்பால் ஊட்டலின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் உணர்ந்து செயற்பட வேண்டியது தாய்மாரதும் குடும்ப உறவினர்களதும் பொறுப்பு என்பதில் ஐயமில்லை. 

முஹம்மத் மர்லின்


Add new comment

Or log in with...