10,379 முறைப்பாடுகள் தொடர்பில் சீ.ஐ.டி தீவிர விசாரணை | தினகரன்


10,379 முறைப்பாடுகள் தொடர்பில் சீ.ஐ.டி தீவிர விசாரணை

118 இலங்கையருக்கு இன்டர்போல் சிவப்பு அறிக்கை

ஷாபியின் சொத்துகள் தொடர்பில் விசாரணை; உரிய முறையில் வரி செலுத்தியுள்ளார்

குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது 10,379 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

இதில் அநேகமான முறைப்பாடுகள் மோசடி தொடர்பானவையென்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 600 அதிகாரிகள் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்று அங்கு அழைத்துச் செல்லப்பட்டது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர்

ருவன் குணசேகரவும் இதில் கலந்து கொண்டார்.

இதன்போது இன்டர்போல் பிரிவிலுள்ள அதிகாரியொருவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, தற்போது 118 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு அறிக்கையும் 78 இலங்கையர்களுக்கு எதிராக நீல அறிக்கையும் பிறப்பிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பிடிவிறாந்து பிறப்பிக்கப்படாத நிலையிலும் சாட்சியாளர்களென சந்தேகிக்கப்படுவோருக்கு எதிராகவே நீல அறிக்கை பிறப்பிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். மேலும் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்டர்போலின் சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பெயர் விபரங்கள் பொது மக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தப்படுவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சர்ச்சைக்குள்ளான குருணாகல் டொக்டர் ஷாஃபியிடமுள்ள 90 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதென்றும் பணிப்பாளர் ஷானி கூறினார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் அடிப்படையில் டொக்டர் ஷாஃபி சட்டவிரோதமான முறையில் பணம் சேகரித்ததற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விசாரணைகளின்போது தான் எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பதை டொக்டர் ஷாஃபி விளக்கமளித்ததுடன் அவர் முறைப்படி வரிகளை செலுத்தி வந்துள்ளார் என்றும் பணிப்பாளர் ஷானி கூறினார்.


Add new comment

Or log in with...