சம்பள உயர்வில் வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்கள்! | தினகரன்


சம்பள உயர்வில் வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்கள்!

என்ன செய்ய போகின்றது த.மு.கூட்டணி?

ஐம்பது ரூபா கொடுப்பனவு கிடைக்காமல் அரசுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் இறங்குவது சங்கடம். ஆனால், அரசை எதிர்ப்பதால் எஞ்சுவது இழப்பு மட்டுமே! ஆப்பிழுத்த குரங்கின் நிலைமை இது!

கம்பனி தரப்பைக் காப்பாற்ற 30ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒப்பந்தம் செய்து  கொண்ட தொழிற்சங்கங்களால் இனிமேல் 1000ரூபா சம்பளம் பற்றி மூச்சு விட முடியாது.  ஏனெனில் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் சம்பள உடன்பாடு தம்மை அப்பட்டமாக  வஞ்சித்து விட்டதை தோட்ட மக்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இத்தொழிற்சங்கங்கள் வேறு ஏதாவது உபாயத்தைக் கையாள வேண்டி நேரிடும்   

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது' என்பார்கள். அதே போல ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழ் முற்போக்குக் கூட்டணி. சம்பளப் பிரச்சினையில் இருந்து சாமர்த்தியமாக நழுவிக் கொண்டது ஏற்கனவே நடந்த சம்பவம்.

 30ரூபா சம்பள அதிகரிப்பு முறையல்ல என்று குறை சொல்லி விட்டு பேசாமல் இருந்திருக்கலாம் த.மு.கூட்டணி. ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை விவகாரமாக்கி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ. காவுக்கும் இ.தே.தோ சங்கத்துக்கும் தர்மஅடி கொடுக்கத் தயாரானதன் விளைவாகத்தான் இன்று அதன் தர்மசங்கடத்தைப் பலரும் பார்க்கின்றார்கள்.

சூட்டோடு சூடாக த.மு. கூட்டணி கோரிய 140ரூபாவோ அல்லது இணக்கம் காணப்பட்ட 50ரூபாவோ கிடைத்திருந்தால் கூட்டணி எண்ணம் கூட ஈடேறியிருக்கலாம். ஆனால் இதுவரை நடப்பதெல்லாம் இழுத்தடிப்பு மட்டுமே.

இதனாலேயே இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகியிருக்கின்றது த.மு கூட்டணி என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதேநேரம் சொற்ப தொகைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் இன்று த.மு கூட்டணி படும் பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அற்ப தொகை அதிகரிப்பை அப்போதே மறந்து விடுவார்கள் இந்த மக்கள் என்பது அவர்கள் அறியாத சங்கதி அல்ல. உண்மையில் இந்த 50ரூபா எப்பொழுதாவது கிடைக்கும் பட்சத்தில் அது த.மு.கூட்டணியைப் பொறுத்தவரை தேர்தல் கால நெம்புகோலாகவே இருக்கும். மறுவளமாக, கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் போய் சம்பள அதிகரிப்பு ஒன்றைப் பெற்றுத் தந்ததை சரித்திரமாக்கிக் கொள்ள முடிந்திருக்கும்.

ஏற்கனவே கூட்டணி வசம் சேவையின் கனம் தேங்கி நிற்கின்றது. குறுகிய காலத்தில் அது சில சாதுரியங்களைச் சாதித்து விட்டிருக்கின்றது. ஆனால் அதன் பயன்பாடுகளைத்தான் மக்கள் இன்னும் முழுமையாக பெற முடியாதவர்களாக இருப்பதாக பலரும் அபிப்பிராயப்படுகின்றார்கள். பிரதேச சபைக்கூடாக பெருந்தோட்டப் பிரதேசங்களில் பாதை, நீர் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதில் இருந்த தடைகள் நீக்கப் பெறுவதற்கு கூட்டணியே காரணம். இருந்தும் அதன் வெளிப்பாடுகள் மந்தகதியிலேயே பார்வைக்கு வர முடிந்துள்ளது. இன்று அவசரமாக தோட்டப் பகுதிகளுக்கான உள்ளகப் பாதைகள், வெளியகப் பாதைகளுக்கு காபட் போடப்படுவதைக் காண முடிகின்றது.

வரப்பிரசாத ரீதியில் இவை வாய்க்கப் பெற்றாலும் கூட தாமதமான ஏற்பாடு என்பதால் இதுவும் தேர்தல்கால கோலங்களாகவே மக்கள் மனதில் பதிவாகும்.

மலையகத்துக்கான தனியான அபிவிருத்திச் சபை கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் அதன் பெறுமதி பற்றிய தெளிவு எதுவும் மக்களிடம் இல்லை. வீடமைப்புத் திட்டம் நடந்தேறி வருகின்றது.

அதன் அருமையை விட அதில் காணப்படும் குறைகள் பற்றியே பலரும் பேசுகின்றார்கள். அண்மைய காற்றால் கழற்றியெறியப்பட்டக் கூரைகள், தரமற்ற மூலப் பொருட்கள் பாவனையால் பயன்பாடுக்கு முன்னரே சிதிலமடையும் சுவர்கள், கதவு, யன்னல்கள், பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பாகுபாடுகள்...

இப்படி குறைகாணல்கள் இருக்கும் நிலையில், அதுபற்றிய ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிய வெளிப்படையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாக மக்கள் நம்பவில்லை.

ஏதோ கடமைக்காக வீட்டைக் கட்டித் தருவதாகவே மக்கள் எடைபோடுகிறார்கள். இதனால் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் முயற்சிகள் எதிர்வினையாகவே போகும் அபாயம் உள்ளது.

இவ்வாறு சின்னச் சின்ன சமாச்சாரங்களைக் கூட பென்னம் பெரிதாக ஊதிப் பெருப்பிப்பது மலையகத்தில் அரசியல் கலாசாரமாகவே ஆகிப் போய்விட்டது என்னவோ உண்மை. தற்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால் சம்பள விடயத்தை சங்கூதி நினைப்பூட்டி விடாமல் வீடமைப்பு விடயத்தில் அவதானத்தைத் திருப்பிவிட நினைக்கின்றன எதிரணிகள். தவிர 50ரூபா கிடைக்கும் பட்சத்தில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.காவுக்கு அது ஒருவிதமான கௌரவப் பிரச்சினையாகவே இருக்கும். பெருந்தோட்ட மக்களுக்கு மேலதிகமாக 50ரூபா கிடைக்கின்றதே என்ற திருப்தியை விட, அப்படி கிடைத்து விட்டால் அது கூட்டு ஒப்பந்தத்துக்குஅப்பால் நிறைவேற்றப்பட்ட சாதனையாகி விடுமே என்னும் சங்கடத்தில் இ.தொ.கா  இருக்கலாம் என்பது அவதானிகளின் பதிவு.

எனவே இது எழுதப்படும் வரை 50ரூபா வாங்கித்தாருங்கள் பார்ப்போம் என்னும் இ.தொ.கா. வின் சவால் நிறைவேறியே வருகின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆக 50ரூபா சிறப்புக் கொடுப்பனவு த.மு.கூட்டணிக்கு பல்வேறு வடிவங்களில் நெருக்கடியை உண்டாக்கவே செய்கின்றது. தவிர தனது அரசியல் கூட்டு பற்றிய ஒரு மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தையும் உண்டுபண்ணியுள்ளது. பிரதமர் ரணில் ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் வாக்குறுதியை வழங்கி வருகிறார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரத்தையும் கூட அவர் தாக்கல் செய்திருந்தார்.

அவரால் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை வழிக்குக் கொண்டு வர முடியாமல் இருக்கின்றது. வழமை போல இந்த  விசேட அமைச்சரவைப் பத்திரத்துக்கு எதிர்ப்புக் காட்டிய நவீன் திசாநாயக்க அமைச்சர் திகாம்பரத்துக்கு.சவால் வேறு விடுத்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளகளுக்கு வழங்குவதற்கு 600மில்லியன் தமக்கு வழங்கப்படவில்லை. எனவே 50ரூபா அதிகரிப்பை வழங்க முடியாது. முடிந்தால் திகாம்பரம் தனது அமைச்சில் இருந்து நிதியை ஒதுக்கிக் கொடுக்கட்டும் என்று கூறியுள்ளார் நவீன் திசாநாயக்க. இதனால் வெகுண்டெழுந்த பழனி திகாம்பரம், இந்தப் பிரச்சினைக்குக் தீர்வு கிட்டும் வரை புதிய கூட்டணியில் கையொப்பம் இடப் போவதில்லை என்று கூறிவிட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருக்கின்றார். இது அவரை எதிர்ப்பவர்களுக்கு தீனி போடும் சமாச்சாரம். ஏனெனில் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு மீண்டு நம்பிக்கையை உண்டு பண்ண எதையாவது செய்தாக வேண்டும். இப்பொழுது த.மு.கூட்டணி என்ன செய்யப் போகின்றது என்பதே மலையக அரசியலில் பேசுபெருளாகி இருக்கின்றது. ஒன்று 50ரூபாவை வாங்கித் தர வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே தேர்தல் பிரசாரங்களில் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தைக் கிழிக்கலாம். இல்லாவிட்டால் சம்பள அதிகரிப்பு என்ற வார்த்தையை மறந்தும் கூட உச்சரிக்க முடியாது போய்விடும்.

ஒரு காலகட்டத்தில் இலங்கையின் தேசிய அரசியல் அரிசியியலாக இருந்தது போல இன்று மலையக அரசியல் சம்பளவியலாகவே மாற்றப்பட்டுள்ளது.

இதனை தவிர்ப்பது என்பது இலேசுப்பட்ட விடயமாக இருக்கப் போவது இல்லை. கம்பனி தரப்பைக் காப்பாற்ற 30ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒப்பந்தம் செய்து கொண்ட தொழிற்சங்கங்களால் இனி1000ரூபா சம்பளம் பற்றி மூச்சுவிட முடியாது. ஏனெனில் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் சம்பள உடன்பாடு தம்மை அப்பட்டமாக வஞ்சித்து விட்டதை தோட்ட மக்கள் உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இத்தொழிற்சங்கங்கள் வேறு எதாவது உபாயத்தைக் கையாள வேண்டி நேரும். தவிர 50ரூபா அதிகரிப்பை வாங்கித்தர திராணியில்லாத கட்சி என்று த.மு.கூட்டணியை விமர்சிக்கும் தார்மீக உரிமையும் இவற்றுக்குக் கிடையாது என்பதே உண்மை.

இந்தப் பின்புலத்தில் த.மு.கூட்டணி எடுக்கப் போகும் முடிவு அதிரடியானதாக இருக்குமா?

இதுதான் மலையக அரசியல் எதிர் நோக்கியிக்கும் கேள்வி. இறுதிவரை 50  ரூபா கிடைக்காத நிலையில் தேர்தல் ஏதும் அறிவிக்கப்பட்டு விட்டால் அக்கட்சியினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய முடியுமா? இங்குதான் சிக்கல் இருக்கின்றது. எந்தவொரு பெரும்பான்மை இனக் கட்சியோடும் இணையாமல் சுயமாக தனித்து நின்று தேர்தலில் போட்டியிடும் தெம்பு த.மு.கூட்டணிக்கோ இ.தொ.காவுக்கோ இல்லை. அவ்வாறான தொரு பின்புலம் ஏற்கனவே மலையக கட்சிகளால் உருவாக்கப்பட்டு விட்டது. திடுதிப்பென அதனைத் தகர்த்துக் கொள்ள இயலாது. தற்போதைய நிலையில் ஐ.தே.க வோடு முரண்பாட்டு அரசியலில் ஈடுபடுவது த.மு.கூட்டணிக்கு அவ்வளவு சாதகமானதல்ல. இது அக்கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கலாம். இதேவேளை 50ரூபாவை வழங்க முடியாத இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் இறங்குவது எத்தனை சங்கடமானதாக இருக்கப் போகின்றதோ தெரியாது.

ஆதரித்தால் ஆபத்து. எதிர்த்தால் இழப்பு. உண்மையில் ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் த.மு.கூட்டணிக்கு. இதுதான் மதின்மேல் பூனையாக காத்திருக்கும் இ.தொ.காவின் நிலையும்.  கூட்டணியும் இ.தொ.காவும் இன்று போட்டிப் போட்டுக் கொண்டு பாதைகளுக்கு காபெட் போடுவது, பாலங்கள் திறப்பது, வீதிகள் அமைப்பது, குடிநீர் வசதி செய்வது என்று பரபரப்பாக இயங்குவது எல்லாம் எந்த அளவுக்கு மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.

தற்போது மலையக அரசியலில் நிலவும் குழப்பமும் மந்தமுமான சூழ்நிலையை மாற்றியமைக்கும் வல்லமை 50ரூபா கொடுப்பனவுக்கு இருக்கவே செய்கின்றது. ஏனெனில் இந்த விவகாரத்தில் த.மு.கூட்டணி மீதான செல்வாக்கோடு பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் சேர்கின்றது. ஒரு கட்சியும் அது சார்ந்த சமூகமும் ஒரே நேரத்தில் ஓரம் கட்டப்படும் நிலைமை. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றார் பிரதமர் ரணில்? அவரால் ஏன் நவீன் திசாநாயக்கவை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை? இயலாமையா? அல்லது அக்கறை இன்மையா? இக்கேள்விகளுக்கு எல்லாம் ரணில் எடுக்கும் முடிவுதான் பதில் தரப் போகின்றது.

இதேநேரம் த.மு கூட்டணி ஐ.தே.க.வை பகைத்துக் கொள்ளும் தீர்மானத்தை எந்த நிலையிலும் எடுக்குமென எதிர்பார்க்க முடியாது.

நவீன் திசாநாயக்க 50ரூபா கொடுப்பனவுக்கு முட்டுக்கட்டை  போடுவதாக தொழிற்சங்கங்கள் கூறி வரும் நிலையில், இ.தொ.கா, இ.தே.தோ.தொ சங்கம், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திருப்தியடையவே செய்யும். கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் நின்று எந்தவொரு சக்தியும் சம்பள நிர்ணயத்தில் ஈடுபடுவது இவைகளுக்கு கசப்பான காரியமாகவே இருக்கும் என்பதில் கடுகளவேனும் ஐயம் இல்லை.

த.மு.கூட்டணி 50ரூபா கொடுப்பனவுக்கு இணக்கம் காட்டிய போது அதற்கு ஆதரவளித்த நவீன் திசாநாயக்கவும் இந்த அரசாங்கமும் இன்று இழுத்தடிப்புச் செய்வது எதனால் என்பது யோசிக்க வேண்டி காரியமே. அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது போல த.மு.கூட்டணி,பிரதமர் ரணில், அமைச்சர் நவீன் திசாநாயக்கவாவை விட மேலானதொரு சக்தி பின்னால் இருந்து ஆட்டுவிக்கின்றதா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது. ஆக இன்று மலையக அரசியல் 50ரூபாவை அடிப்படையாக வைத்தே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.

தியத்தலாவை
பாலசுப்பிரமணியம்


Add new comment

Or log in with...