'உழ்ஹிய்யா' கடமை ஒரு நோக்கு | தினகரன்


'உழ்ஹிய்யா' கடமை ஒரு நோக்கு

உழ்ஹிய்யா வணக்கத்திற்கு ஷரீஆ சட்டப்பரப்பில் என்ன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அது வசதி படைத்த ஒருவருக்கு தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையா? அல்லது சுன்னத்தான ஒரு அமலா? வசதியிருந்தும் அதனை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் குற்றமாகுமா? இவை குறித்து தெளிவான விளக்கம் இல்லாவிட்டால் சமூக தளத்தில் பாரதூரமான தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.  

தேசிய நல்லிணக்கத்தையே பாதிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் பாய்ந்து செல்லும். எனவே ஷரீஆ சட்டப்பரப்பில் அதன் அந்தஸ்தை மிகச் சரியாக புரிந்து கொள்வது தார்மீகக் கடமையாகும். 

உழ்ஹிய்யா என்பது வாஜிபான ஒரு வணக்கம் என சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். 

இக்கருத்தை இமாம் அபூஹனீபா (ரஹ்), இமாம் நகஈ, இமாம் முஹம்மத், இமாம் அவ்ஸாஈ , இமாம் இப்னு தைமியா ஆகியோர் கூறியுள்ளனர். அவ்வாறே இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் இரண்டு அபிப்பிராயங்களில் ஒரு கருத்தும் மாலிக் மத்ஹபின் ஒரு சாராரின் கருத்தும் உழ்ஹிய்யா வாஜிப் என்ற சிந்தனைக்கு வலுச் சேர்க்கின்றது.  

'நீர் அவனுக்காகவே தொழுது பலியிடுவீராக!' என்ற அல்-குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாக அவர்கள் முன்வைக்கின்றனர். 

பின்வரும் ஹதீஸ்களையும் வாஜிப் என்ற சிந்தனையை கொண்டிருப்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாக அடையளப்படுத்தலாம். 

ஜுன்துப் இப்னு சுஃப்யான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நான் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹஜ் 10வது நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், 'பெருநாள் தொழுவதற்கு முன்பே குர்பானிக்கான பிராணியை அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை தொழுகைக்குப் பின் அறுக்கட்டும் என்றும் அறுக்காமல் இருப்பவர் தொழுகை முடிந்தவுடன் அறுக்கட்டும்" என்றும் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) 

"யார் வசதியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ அவர் நமது தொழுகை நடைபெறும் இடத்தை நெருங்கவும் வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அஹமத், இப்னுமாஜா) 

 உழ்ஹிய்யா வாஜிப் அல்ல 

இமாம் ஷாபிஈ, இமாம் ஸவ்ரி, இமாம் ஸயீத் இப்னு முஸைய்யப், இமாம் மாலிக் மற்றும் ஹம்பலி மத்ஹபின் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தும் உழ்ஹிய்யா முக்கியமான ஒரு சுன்னத் என்பதே. பொதுவாக ஸஹாபாக்களின் கருத்தும் உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும் என்பதே. எனவே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி உழ்ஹிய்யா வாஜிப் அல்ல. 

'துல் ஹஜ் முதல் பத்தில் நுழைந்துள்ள ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால்... என ஆரம்பிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ளது. இந்த ஹதீஸில் தெளிவாகவே விருப்பமுள்ள ஒருவர் செய்யக் கூடிய ஒரு வணக்கமாகவே உழ்ஹிய்யாவை நபிகளார் அறிமுகம் செய்துள்ளார்கள்.  

 ஸஹாபாக்கள் வாழ்வில் உழ்ஹிய்யா 

உழ்ஹிய்யா என்பது இறையச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வணக்க வழிபாடாகும். இருந்தும் ஸஹாபாக்கள் அதனை கட்டாயக் கடமையாக புரிந்து கொள்ள வில்லை. மாறாக சுன்னத்தான ஒரு அமலாகவே பார்த்தனர். மக்கள் அதனை ஆறாவது கடமையாக நோக்கக் கூடாது என்பதில் அபூபக்கர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும் மிகக் கவனமாக செயற்பட்டார்கள்.  

நபித்தோழர்கள் பலர் உழ்ஹிய்யா வணக்கத்தை பொது மக்கள் கடமை என்று எண்ணி விடிக் கூடாது என்பதற்காக அதனை நிறைவேற்றாமல் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் ஷாதிபி அவர்கள் தனது இஃதிஸாம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

பிலால் (ரழி) அவர்கள் ஒரு சேவலை அறுத்து உழ்ஹிய்யா கொடுத்தார்கள் என்பதும் நம்பகமான அறிவிப்பாகவே காணப்படுகிறது. இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் தனக்கு வசதிகள் இருந்தும் மக்கள் உழ்ஹிய்யா வணக்கத்தை கடமை என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக குர்பான் கொடுப்பதை வேண்டுமென்றே தவிர்ந்து கொண்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

சட்ட வசனங்கள் தரும் அர்த்தங்களை நபித்தோழர்களின் புரிதல்களுடன் விளங்குவது சட்டங்களின் தராதரங்களை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக அமைகிறது. இங்கு ஸஹாபாக்கள் உழ்ஹிய்யா ஒரு கடமையல்ல என்பதை வித்தியாசமான முறையில் புரிய வைத்துள்ளார்கள். சிறப்புகுரிய முதலிரண்டு கலீபாக்களும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றாமல் தவிர்ந்து கொள்வதினூடாக அது கடமையல்ல என்பதை நேரடியாகவே விளக்கியுள்ளார்கள். 

குர்பானுக்கு அறுத்துப் பலியிடுவது ஏற்றமானது என்பதை இப்னு அப்பாஸ் ரழி) அவர்கள் அறியாதவரல்ல. இருந்தும் அவர் அறுத்துப்பலியிடாமல் அறுக்கப்பட்ட மிருகத்தின் ஒரு பகுதியை வாங்கி இது எனது உழ்ஹிய்யா என கூறுவதன் மூலம் உழ்ஹிய்யாவை ஆறாவது கடமையாக கருதிவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

பிலால் ரழி அவர்கள் ஒரு சேவலை உழ்ஹிய்யா கொடுத்து விட்டு அது தான் எனது உழ்ஹிய்யா என்று கூறிய அறிவிப்பும் உழ்ஹிய்யா கட்டாயக் கடமையல்ல என்ற கருத்தையே சொல்லுதவற்கு முனைந்துள்ளார்கள். 

உழ்ஹிய்யா பற்றிய இந்தப் பின்னணி இல்லாததன் காரணமாகவே கடன்பட்டாவது குர்பான் கொடுப்பதற்கு சிலர் முனைகின்றனர். கூட்டுக் குர்பான் திட்டமும் இந்த புரிதலில் ஏற்பட்ட கோளாறாகவே பார்க்க முடியும். 

ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ உழ்ஹிய்யா கொடுக்கலாம். அதற்காக கூட்டுக் குர்பான் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பணம் சேகரித்து செய்யப்படும் திட்டமிட்ட கூட்டு அமலாக உழ்ஹிய்யா வணக்கம் மாற்றப்படுவது நபிகளாரின் சுன்னாவல்ல.  எனவே அந்தந்த வணக்கங்களுக்கு அதற்குரிய சட்ட அந்தஸ்தையே வழங்க வேண்டும்.    

 

அஷ்ஸஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி)


Add new comment

Or log in with...