இலக்கியங்கள் பேசும் 'காணப்படாது காண்டல்' | தினகரன்


இலக்கியங்கள் பேசும் 'காணப்படாது காண்டல்'

யானோக்குங் காலை இவ்வாறு பிறரால் காணப்படாமல் பிறரைக் காணும் வழக்கம் தமிழரிடத்து உண்டு என்பதைத் தமிழிலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.

 பெண்டிர் சிலர் பிறர் தம்மைக் காணுங்கால் காணாது காணாக்கால் காண்பது என்பதை பண்டைத் தமிழர் கண்டறிந்திருந்தனர். இது பற்றியே "யானோக்குங் காலை நிலனோக்கும்  நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்'  (1095) என "குறிப்பறிதல்'  அதிகாரத்தில் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலப் புலவர்களுள் ஒருவரான ஸ்டீவென்சன் தமது கட்டுரையொன்றில் பிறர் காணாமல் தான் கண்ட  காட்சியொன்றை இவ்வாறு வருணிக்கின்றார்.

“மிஸ்சென்டன் என்ற நகரத்தை இரவு நேரத்தில் அவர் சுற்றிவரும்போது இருள் சூழ்ந்த அந்த இரவில் அவர் கண் ஓர் இல்லத்தின் சாளரத்தின் வழியே உள் நோக்கியுள்ளது. அங்கு தன் மடிமீதிருந்த ஒரு குழந்தைக்கு அழகுடைச் சிறுமி ஒருத்தி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அவளருகே கிழவியொருத்தி கணப்பின் முன் உட்கார்ந்த வண்ணம் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். அதனைத் தாம்  உள்ளிருப்பவர்  காணாது கண்டதாகவும், கண்டு பெருமகிழ்ச்சி எய்தியதாகவும்” வர்ணித்துள்ளார்.

ணே துணை இவ்விதம் பிறர் தன்னைக் காணாது தான் அடுத்தவரைக் காண்பதற்கு உதவியாயிருப்பன தூண், கதவு முதலியன. 

இவற்றையே பெரும்பாலும் பெண்டிர் துணைக்குக் கொள்வது கண்கூடு. குடுமி தேய கதவடைத்த தாயாருக்கும் மகளுக்கும் நடந்த கதைகளை முத்தொள்ளாயிரம் நமக்கு முந்தியுறுத்தியுள்ளது.

புறநானூறு தரும் இலக்கியச் செய்தியில் (புறம்-86),  காதலனைத் தேடிச்சென்ற தலைவி அவன் இல்லத்திலுள்ள காவற்பெண்டு என்ற செவிலித்தாய் ஒருத்தியை தனக்குரிய அவளுடைய மகன் எங்கு சென்றிருக்கிறான் என்று வினவுகிறாள். வினவும்போது அவள்  ஒரு தூணை மறைவாக நின்று பற்றிக்கொண்டு நின்றாள். பிறர் தன்னைக் காணாது தன் துணையைத் தேடி தூண் மறைக்க நின்றாள் என்று அறிகின்றோம்.

சிலப்பதிகாரத்திலும் இத்தகைய காட்சியொன்று காணக் கிடைக்கிறது. மதுரையை நோக்கிப் புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் காட்டு வழியே சென்று "ஐயை' என்பவளது  கோட்டத்தை அடைகிறார்கள்.

அங்கு வேடுவ மகளாகிய "சாலினி'  என்னும் தேவராட்டி  நடந்து தேய்ந்த கால்கள் நொந்து வருந்தியிருந்த கண்ணகியை நோக்கி  "ஒரு மாமணியாய் உலகினுக்கு ஓங்கிய திருமாமணி' என்று தன்மேல் வந்துற்ற தெய்வத் தன்மையினால் புகழ் மொழிகிறாள்.

இதனைக் கேட்ட  கண்ணகி கணவன் எதிரே தன்னைப் புகழ்ந்த மூதறிவாட்டியின் மயக்கத்தை நினைத்து "இம் மூதறிவாட்டி தெய்வ வெறி கொண்டு ஏதோ மயங்கிக் கூறினாள்'  (சிலப். வேட்டுவ வரி.5.51-53.) என்னும் கருத்தில் வெட்கி நகைக்கின்றாள்.

ஆனால் அப்புன்னகை அத் தேவராட்டிக்குப் புலப்பட்டதோ எனின் இல்லை. ஏன்? கண்ணகி புகழ் நாணிப் புரிந்த புன்னகையை தேவராட்டி கண்டாளல்லள். காரணம் கண்ணகி தன் அரும்பெறற் கணவனது  முதுகில் ஒடுங்கிய பின்னரே புன்முறுவல் பூத்ததுதான். 

மூதாட்டியின் புகழ் சொல்லைக் கேட்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சியினால் தோன்றிய அப் புன்னகையை தேவராட்டியும் தன் கணவனும்  கண்டுவிடக்கூடாதே என்பது கண்ணகியின் கருத்து.

இங்கு அவள் மறைய நின்று காண,  தூண் போன்று உதவியது கணவன் தோள்களே!

"எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த

 பாணன் சிதைந்து, ஆங்கே

 வாய் ஓடி ஏனாதிப் பாடியம் என்றற்றா,

 நோய்நாம் தணிக்கும் மருந்து, எனப் பாராட்ட

 ஓவாது  அடுத்து, அத்தா அத்தா என்பான்'

 (கலித்.மருத.81.16-19)

 பரத்தை ஒழுக்கம் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனால் நிகழ்ந்த நோயைத் தன் மகன் முகம் நோக்கித் தணித்துக்கொண்டு வந்தாள் ஒரு பெண்.

அவன் நடைவண்டி கொண்டு நடை பயின்று வந்தான். ஒருநாள் தலைவி தன் மகனைப் பார்த்து "நீ  கற்றவற்றுள் ஒன்றைக் கூறு? என்று வினவினாள். அப்போது தலைவன் தலைவிக்குப் பின்னால் வந்தான். தன் வருகையைத் தலைவிக்குத் தெரிவிக்க வேண்டாம் எனத் தோழியர்க்கு சைகை செய்தான்.

அதனால் அவன் வருகையை அறியாத தலைவி தோழியை நோக்கி "நாம் இவன் கற்றதைச் சொல் என்றால், அத்தா அத்தா என்று இவன் தந்தையையே சொல்லி வருத்துகிறான்' என்றாள். தந்தையைப் பார்த்துவிட்டதால் மகன் "அத்தா அத்தா' என்று அழைத்தபடியே இருந்தான்.  திரும்பிப் பார்த்தாள் தாய். அங்கு தன் கணவர் நின்றிருந்தார். அவர் வந்து முன்னரே அங்கு நின்று தன் செய்கையைக் கண்ணுற்று வந்தார் என்பதை அறிந்து திகைத்தாள்; நாணினாள்; பேச்சை மாற்றினாள். 

பிறர் காணாமல்  மறைந்திருந்து பார்த்து மகிழும் இயல்பையே "காணப்படாது காண்டல்' என்று இலக்கியங்கள் பேசுகின்றன.

எனினும் நமக்கும் மேலே ஒருவன் காணப்படாமலே கண்டு கொண்டிருக்கிறான் என்ற நினைப்போடு கண்டால் அக்காட்சியால் கிடைக்கும் இன்பம் மாட்சிமிக்கதாகும்.                           

மா. உலகநாதன்


Add new comment

Or log in with...