கைவிடப்பட்ட பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு | தினகரன்


கைவிடப்பட்ட பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டு. வெலிக்கந்த பிரதேச செயலக எல்லையில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8கிலோ மீற்றர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ்வாலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர். 

1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையில் இருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் முதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வழிபடப்பட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் ஆகும். 

இவ் ஆலயத்தை சுவாமி ஐயம்பிள்ளை என்பவரின் தனி முயற்சியினாலும் அப்பிரதேச இந்து மக்களின் ஒத்துழைப்புடனும் மூலஸ்தானத்துடன் கூடிய மண்டபத்துடன் ஆலயம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலையும் பிரதிட்சை செய்யப்பட்டது. 

1925ஆண்டு முத்துக்கல் உடையாரும் பொதுமக்களும் சேர்ந்து ஆலயத்தை அபிவிருத்தி செய்து ஆலயத்துக்குரிய மடமும், மண்டபமும் அமைத்து 1929ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆலயத்துக்கு நிரந்தரமாக அர்ச்சகர் நியமித்து தினப்பூசையுடன் விசேட பூசைகளும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. 

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயரவும் ஆலயம் பூசை வழிபாடுகள் இன்றி தற்போது காடுவளர்ந்து காணப்படுகிறது. 

ஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றத்துக்கும் இவ்வாலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை பழைய நிலைக்கு புனரமைத்து வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றுவதற்கு கிழக்கு இந்து பெருமக்களிடம் இருந்து ஆலய அபிவிருத்திக்கான உதவிகளை வேண்டி நிற்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

பெரியபோரதீவு தினகரன் நிருபர்  


Add new comment

Or log in with...