வற்றி வரண்டு போன நிலையில் வாகனேரி குளம் | தினகரன்


வற்றி வரண்டு போன நிலையில் வாகனேரி குளம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சினை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக கிராம மக்களுக்கு குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு நீர் இன்மையால் வாகனேரி குளத்தினை நாடி வருகின்றனர். ஆனால் குளத்திலும் நீர் குறைந்து காணப்படுகின்றது. இதனால் குளத்தின் அருகில் பூவல் மூலம் தண்ணீரை வடித்து எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவிப்பதுடன், குளத்தில் நீர் எடுக்கும் போது யானைகள் வருவதால் பயத்தில் தண்ணீர் எடுக்காமல் செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

"தற்போது எங்களுக்கு தண்ணீர்ப் பிரச்சினையோடு யானைப் பிரச்சினையும் பாரிய பிரச்சினையாக உள்ளது. எங்களது நிலைமை தொடர்பாக எவரும் கவனத்தில் கொள்வதில்லை. யானையின் வருகையால் எங்களது உறவுகளில் சிலரை இழந்து காணப்படுகின்றோம்.இவ்விடயமாக பல தடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. எங்களை வந்து பார்ப்பதும் இல்லை. நாங்கள் எங்களின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறோம்" என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வாகனேரி குளத்தினை நம்பி 2500 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றன. 8500 ஏக்கர் வேளாண்மை தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகளால் செய்கை பண்ணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான கால் நடைகள், உயிரினங்களும் இக்குளத்துக்கு பகலிலும், இரவிலும் நீர் பருக வருகின்றன. இக்குளத்தை நம்பி வாழும் விவசாயிகள் வரட்சியால் ஒரு போதும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் இக்குளத்தை புனரமைப்பு செய்வதாக தெரிவித்தார்கள். இன்னும் அது இடம்பெறவில்லை. அதுவே இன்றைய நிலைமைக்குக் காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

"வாகனேரி குளத்தை நம்பி வாழும் எங்களுக்காக குளமும் புனரமைப்பு செய்யப்படவில்லை, யானையால் எங்களை பாதுகாக்க பாதுகாப்பு வேலியும் இல்லை, இரண்டையும் நிறைவேற்றுங்கள்" என வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஓவியராஜா தெரிவித்தார். "வாகனேரி கிராமத்தில் 540 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வாகனேரி குளத்தில் நீர் எடுத்தும், குளத்தை அண்மித்து பூவல் மூலமுமே நீரைப் பெறுகின்றனர்.மாலை நேரங்களில் எங்களுக்குத் தேவையான குடிநீரை பெறுவதற்கு குளத்திற்கு வரும் போது யானைகள் எங்களை தாக்கும் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு அண்மையில் ஒருவரை யானை தாக்கி அவருக்கு கை முறிந்த சம்பவமும் இடம்பெற்றது.எங்களது ஜீவனோபாய தொழிலான மீன்பிடித் தொழிலை செய்வதற்கு இரவு நேரங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. எங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் எங்களை யானைகள் துரத்தும் நிலைமை காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் உடனடியாக எமது கிராமத்திற்கு வருகை தந்து எங்களது நிலைமையை பார்வையிட்டு உடனடியாக தண்ணீர் பிரச்சினை மற்றும் யானை பிரச்சினையை தீர்த்து தருமாறு வேண்டுகின்றேன்" என்றார் அவர்.

"யானையின் பிடியில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு வேலி அமைத்துத் தாருங்கள்" என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபாகரன் தெரிவித்தார்.

வாகனேரி கிராமத்தில் காடு, வளங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அதிக யானைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது. எமது பகுதி மக்கள் குடிநீருக்காக வாகனேரி குளத்தையே நாடி வருகின்றனர்.யானைத் தொல்லை காரணமாக எங்களுடைய தொழில்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதுடன், குடிநீரை பெறுவதற்கு வாகனேரி குளத்திற்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகின்றது.எனவே உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களம் எமது மக்களை யானையின் பிடியில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு வேலியினை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்றார் அவர்.

"வாகனேரி குளத்தினை நம்பியே நாங்கள் எங்களது ஜீவனோபாய தொழிலை மேற்கொண்டு வருகின்றோம். வாகனேரி குளம் இல்லையேல் எங்களது வாழ்க்கையே இல்லை என்ற நிலைமையில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் எங்களது குடிநீர்ப் பிரச்சினை மற்றும் யானைத் தொல்லையில் இருந்து பாதுகாக்க யானை வேலி அமைத்துத் தருவதுடன், வாகனேரி குளத்தையும் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ​வேண்டும்" என்று கிராம மக்கள் மன்டாடிக் கேட்டுக் கொண்டனர்.

 

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கல்குடா தினகரன் நிருபர்


There is 1 Comment

தெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்

Add new comment

Or log in with...