வழமைக்கு திரும்பியது கட்டுவாபிட்டி | தினகரன்


வழமைக்கு திரும்பியது கட்டுவாபிட்டி

வழமைக்கு திரும்பியது கட்டுவாபிட்டி-Katuwapitiya Statue Glass Broken

நீர்கொழும்பு, கட்டுவாபிட்டி பிரதேசத்தில் நேற்று காலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூடப்பட்ட அனைத்து முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் வழமைபோல் இன்று (07) திறக்கப்பட்டன.

கட்டுவாபிட்டி, புனித செபஸ்தியன் வீதியின் முகப்பில் நீர்கொழும்பு - மீரிகம வீதி சந்தியில் அமைந்துள்ள யேசுநாதர் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டியை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து அப்பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

எனினும் கட்டுவப்பிட்டிய பிரதேசத்தில் அமைதியான சூழல் நிலவுகின்றதனால் சகல முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் இன்று காலை முதல் திறக்கப்பட்டன.

நேற்று அதிகாலை குறித்த யேசுநாதர் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டியை இனந்தெரியாத நபர்களில் சிலர் உடைத்துள்ளனர்.

இதனால் நேற்று முற்பகல் வேளையில் நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் கட்டுவாபிட்டி பிரதேசத்திலுள்ள சுமார் 25 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. நீர்கொழும்பு பொலிஸ் வலையப் பிரிவிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த சுமார் 100 இற்க்கும் மேற்பட்ட பொலிஸார் கட்டுவாபிட்டி பிரதேசத்தில் பலத்த பாதுகாப்புக் கடமையில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படை வீரர்கள் இராணுவம் மற்றும் விமானப்படை  வீரர்களும் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுவபிட்டி சந்திக்கு மிக அருகிலுள்ள நீர்கொழும்புப் பிரதேசத்தைச் சேரந்த தீன் சந்தி, பாண்கடை சந்தி, கொப்பரா சந்தி ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் வழமைபோன்று வியாபாரங்கள் நடைபெறுகின்றன. நீர்கொழும்பு நகரத்திலும் வழமையான வியாபாரம் நடைபெற்றுவருகின்றது.

கட்டுவாபிட்டி கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட பிரதேசவாசதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள CCTV கமெராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் உட்பட இராணுவத்தினர் சந்தேகநபர்களைத் தேடி வலை விரித்துள்ளனர்.

(நீர்கொழும்பு தினகரன் நிருபர் - எம். றுஸ்மான்)


Add new comment

Or log in with...