Saturday, April 20, 2024
Home » புதிய நாடுகளை இணைப்பது BRICS ஐ வலுப்படுத்தும்

புதிய நாடுகளை இணைப்பது BRICS ஐ வலுப்படுத்தும்

- இந்திய மத்திய அமைச்சர்

by Rizwan Segu Mohideen
January 24, 2024 6:27 pm 0 comment

புதிதாக நாடுகளை அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளும் போது BRICS அமைப்பு வலுப்பெறும் என்று இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இணைத்துக் கொள்வது அமைப்பின் கூட்டு முயற்சிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்குமென இந்தியா நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘பிரிக்ஸ் விரிவாக்கம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து 2006 இல் பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. என்றாலும் 2024 இல் இந்த அமைப்பை விரிவாக்கும் வகையில் எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் புதிய அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது உலக சனத்தொகையில் 40 வீதத்தினரை இவ்வமைப்பு பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த அமைப்பின் விரிவாக்கமும் நவீனப்படுத்தலும் மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறு அனைத்து உலகளாவிய நிறுவனங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற செய்தியை வழங்குகிறது. 20 ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஏனைய உலகளாவிய நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்கும் இது சிறந்த முன்மாதிரியாகும்.

அதேநேரம் பூகோள அரசியல் காரணங்களுக்காகவோ பொருளாதார நலன்களுக்காகவோ எமது விநியோகச் சங்கிலியை ஒரு போதும் பணயக் கைதியாகப் பயன்படுத்த மாட்டோம். உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியினரான நாம் எம்மால் முடிந்ததைச் செய்வோம். இதற்கு கொவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதியில் நாம் ஆற்றிய பங்களிப்பு நல்ல எடுத்துக் காட்டாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT