மலையக மக்களின் நீண்ட வரலாற்றில் ஒரு மைல் கல் | தினகரன்

மலையக மக்களின் நீண்ட வரலாற்றில் ஒரு மைல் கல்

1997ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் பெருந்தோட்ட மக்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவினை அமைத்தார். இந்த குழுவின் சிபாரிசுக்கு அமையவே இந்த மக்களின் அபிவிருத்தி அம்சங்களை முன்னெடுப்பதற்காக ஒரு தனியான அமைச்சு உருவாக்கப்பட்டது. இதனுடைய பெயர் 2010ம் ஆண்டு வரை பலமுறை மாற்றப்பட்டு வந்தாலும் வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற விடயங்கள் இவ்வமைச்சில் உள்வாங்கப்பட்டன. இந்த பதின்மூன்றாண்டு காலகட்டத்திலே இந்த மக்களை நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இந்த சமு தாயம் தேசிய நீரோட்டத்தில் ஒன்று சேரும் முறையானது துரி தப்படுத்தப்பட்டது.

2006ம் ஆண்டு இந்த அமைச்சு தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு என பெயர் மாற்றம் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக 2010ம் ஆண்டு இந்த அமைச்சு 'பொருளாதார அபிவிருத்தி அமைச்சு' என பெயர் மாற்றம் பெற்று தோட்ட சமுதாய அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. இதன் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே இந்த அமைச்சு மீண்டும் புதிதாக 2015ம் ஆண்டு ஜனவரியில் 'தோட்ட உட்கட்டமைப்பு' என புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இந்த அமைச்சானது 'மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி' என பெயர் மாற்றம் பெற்றது. புதிய அமைச்சாக இருந்த காரணத்தினால் இதற்கான பௌதிக வளங்களும் மற்றும் மனித வளங்களும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தன. இதனை பூரணப்படுத்தி இந்த அமைச்சினூடாக வேலைத்திட்டங்களை முன்னேடுப்பதே இந்த அமைச்சுக்கு உள்ள பிரதான சவாலாக அமைந்தது.

இந்த அமைச்சு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க (2015-_2025) பத்தாண்டுகளை உள்ளடக்கிய சமூக அபிவிருத்தி நடவடிக்கைத் திட்டம் ஓன்றைத் தயாரித்தது. இது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது ஜனாதிபதியின் பணிப்புக்கேற்ப அதனுடைய காலம் 2015முதல் 2020வரை உள்ளடக்கி ஐந்தாண்டாகக் குறைக்கப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு முழுமையான நிர்வாகப் பொறிமுறை அமைச்சிடம் இருக்கவில்லை. இந்த காரணத்திற்காகவே ஒரு அதிகார சபையின் தேவை உணரப்பட்டது.

இந்த அணுகுமுறையிலேயே ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரசபை தேவை என அமைச்சரவை அங்கீகாரத்திற்கு பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கான ஆரம்ப வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்ட பணிக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குழுவின் ஆரம்ப வரைபு 2016ம் ஆண்டு ஜுலையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது, இதை தொடர்ந்தே, இதற்கான மசோதா சட்ட வரைஞர் திணைக்களத்தில் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் கருத்துகள் பெறப்பட்டு அமைச்சரவைக்கு மீண்டும் சமரப்பிக்கப்பட்டது. இது குறித்து, நிதியமைச்சு பெருந்தோட்டமைச்சு, காணியமைச்சு ஆகியவை தங்களுடைய அவதானங்களை சமர்ப்பித்தன. இந்த அவதானங்களை உள்வாங்கி மசோதாவானது மீண்டும் சட்டவரைஞர் திணைக்களத்தினால் மீள்உருவாக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் 2018ம் ஆண்டு ஜுன் மாதம் 25ம் திகதி வர்த்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இது ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு  எடுக்கப்பட்ட போது இதில் பங்கேற்ற அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 35பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதனை ஆதரித்து பேசினர்.

இம்மசோதாவின் ஆரம்ப சட்டவரைவு, அமைச்சரவையினால் நிறைவேற்றப்பட்டு, வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகியது. நிதிஅமைச்சு தனது அவதானத்தில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் இவ்வமைச்சின் கீழ் செயற்படும் போது இன்னுமொரு அதிகாரசபை தேவையா? இதன் செயற்பாடுகளோடு முரண்படுமா என்ற வகையில் கேள்விகள் எழுந்தன. எனவே இதுகுறித்து பணிக்குழு மீளாய்வு செய்து பின்வரும் அம்சங்களை அறிக்கையிட்டது.

1.    நிதியத்தின் பணிகள் வரையறுக்கபட்ட ஒன்று. பெருந்தோட்ட மக்களிள் நலன்புரி விடயங்கள் சம்பந்தமாகவே இது கவனம் செலுத்துகின்றது,

2.    இதனுடைய வருமான உருவாக்க முயற்சிகளும் வரையறுக்கப்பட்டதாகும்.

3.    அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியின் மூலமாகவே, வீடமைப்பு வேலைகளை இது செய்து வருகின்றது, அமைச்சிற்கு அப்பால் இது வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதில்லை.

4.    ஆரம்ப சிறுவர் பராமரிப்பு குறித்த விடயங்களில் (கல்வி உட்பட) இது கவனம் செலுத்துகின்றது. இது நலன்புரி விடயங்களில் கவனம் செலுத்துகின்றதே ஒழிய அபிவிருத்தி குறித்த விடயங்களில் அல்ல. பலவிதமான கருத்துகள் கவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரைபு திருத்தப்பட்டு சட்டவரைஞரால் மீள்திருத்தம் செய்யப்பட்டு, சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெறுவதிலே காலதாமதம் ஏற்பட்டது.

நோக்கங்களும் செயற்பாடுகளும்:

இந்த அதிகார சபைக்கு இரண்டு முக்கிய குறிகோள்கள் உள்ளன. ஒன்று இச்சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிப்படுத்தலாகும். இரண்டாவது சமுதாயத்தினரை தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தலாகும். இந்த நோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இம்மசோதாவிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளன. முதலாவது மலைநாட்டின் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதலாகும். இந்த அமைச்சு வீடுகளை அமைப்பதை பிரதான பணியாக மேற்கொண்டு வருகிறது. இந்த வீடுகளை மையமாகக் கொண்டு அவற்றை புதிய கிராமங்களாக மாற்றியமைக்கக் கூடிய பொறுப்பு இந்த அதிகாரசபையை சார்ந்த ஒன்றாக இருக்கும்.

இதற்காக இந்த அதிகாரசபை தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயற்படும். அத்தோடு சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் இது பங்குபற்றுதலையும் உறுதிப்படுத்தும். இன்று அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பது இந்த மக்களுக்கான வீட்டுரிமையை வழங்குதலாகும். இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தோட்டங்களில் வாழும் சட்டரீதியான குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதிகளை வழங்கலை இந்த அதிகாரசபை வசதிப்படுத்தும்.

அத்தோடு தோட்டத்துறையினுடைய இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும். தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்தும். அத்தோடு பெண்கள், சிறுவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியாக தோட்டங்களில் வாழ்கின்ற குடியிருப்பாளர்களுக்கு எல்லா வசதிகளையும் உறுதிப்படுத்தும். சூழலை பாதுகாப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் இது மேற்கொள்ளும். தோட்டப்பகுதிகளில் ஏற்படும் மண்சரிவு போன்ற அபாயங்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு மாற்று நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்துவதற்கு முயற்சிகள் செய்யும்.

'தோட்டப்புற சமூக அபிவிருத்தி' எனும் போது 1992ம் ஆண்டிலே தோட்ட கம்பனிகள் உருவாக்கப்பட்டதிலிருந்து ' டிரஸ்ட்' என்ற நிறுவனமே பொறுப்பாக இருந்து வந்தது. முதல் பத்தாண்டு காலப்பகுதியில் (1992_-2002) இந்த நிறுவனம் வெளிநாட்டு உதவியுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழே செயற்பட்டு வந்தது. அத்தோடு இது தோட்டக் கம்பனிகளின் சார்பாகவே செயற்பட்டு வந்தது. எனவே கொள்கை ரீதியான முடிவுகள் அமைச்சின் மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதால் இந்த அதிகார சபையோடு இணைந்து டிரஸ்ட் நிறுவனத்தை முரண்பாடற்ற வகையில் செயற்படுத்தவேண்டிய பொறுப்பு அமைச்சை சார்ந்ததாக அமையும். 

செயற்பாட்டு ரீதியாக நோக்குகையில் அமைச்சின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை புதிய கிராமங்களாக மாற்ற வேண்டிய தேவை இந்த அதிகார சபைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனித, நிதி மற்றும் பௌதிக வளங்கள் ஒன்று திரட்டப்பட்டு ஏனைய நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு செயற்பட வேண்டிய தேவை இவ்வதிகார சபைக்கு உண்டு.சகல நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இவ்வதிகாரசபைக்கு உரிய ஒன்றாகும்.

தோட்டத்துறையில் தற்போது தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி புதிய சமூக அடுக்குகள் உருவாகியுள்ளன. தோட்ட சனத்தொகையில் 30- தொடக்கம் 40சதவீதமானோர் தோட்டத் தொழிலில் ஈடுபடாது தங்களின் வாழ்வாதாரத்தை பிற முயற்சிகளில் பெற்று தோட்டங்களில் சட்டரீதியாக வாழ்கின்றனர்.இவர்களையும் உள் ஈர்க்க வேண்டிய கடப்பாடு இவ்வதிகாரசபைக்கு உண்டு.

இம்மக்களின் பிரதான பிரச்சினையாகக் காணப்படும் வறுமை, போசாக்கின்மை, படித்தவர்களிடையே காணப்படும் வேலையின்மை போன்றவை நீக்கப்பட்டு, நாட்டின் மொத்த அபிவிருத்திக்கும், வறுமை ஒழிப்பிற்கும் அதிகாரசபை பங்களிப்பதாக அமையும்.

எம். வாமதேவன் 

(ஆலோசகர், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அமைச்சு)

 


Add new comment

Or log in with...