Tuesday, April 16, 2024
Home » விவசாயம், சுற்றுலாத்துறைக்கு மீண்டும் விடுவிக்க தீர்மானம்
வனவள பாதுகாப்பு திணைக்கள காணிகள்

விவசாயம், சுற்றுலாத்துறைக்கு மீண்டும் விடுவிக்க தீர்மானம்

by Gayan Abeykoon
January 24, 2024 8:24 am 0 comment

னவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். 

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக 61 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல வருடங்கள் செல்லுமென  நாங்கள்   நினைத்திருந்தோம். ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான முறையில் கையாண்டு, நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும் வகையில் அதனை செயற்படுத்தி இருக்கிறார். இதற்காக முதலில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் உட்பட கிராமிய பொருளாதார அமைச்சுக்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வகையில், இம்முறை நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் நேரடியாக கிராமிய பொருளாதார அமைச்சின் ஊடாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடுகளை வழங்குதல் மற்றும் சிறு தானிய பயிர்ச்செய்கைக்கு அவசியமான விதைகளை வழங்கும் வேலைத்திட்டங்களும் இவற்றில் அடங்கும்.

இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியன் மூலம் எமது அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் சுமார் 95% முதல் 98% வீதம் வரையில் செலவிடப்பட்டுள்ளது.  இதனூடாக மக்கள் பயனடைந்துள்ளனர்.

குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் இம்முறை பயறு அறுவடை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 1050 மெட்ரிக் தொன் பயறு அறுவடை செய்யப்பட்டது. அத்துடன், ஆடு வளர்ப்பிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அது தொடர்பான விடயங்களை மக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளோம். குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT