சுற்றுலாத் துறை நிலைபேறு சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகம் | தினகரன்

சுற்றுலாத் துறை நிலைபேறு சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை நிலைபேறான வகையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) தேசிய நிலைபேறான சுற்றுலாத்துறை அத்தாட்சிப்படுத்தல் திட்டம் (National Sustainable Tourism Certification Scheme - NSTCS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்னிலையில் இது தொடர்பான ஒப்பந்தம், இலங்கை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிசு கோமஸ் மற்றும் ஐநா அபிவிருத்தி திட்ட, கொள்கைகள் மற்றும் வடிவமைப்பு நிபுணர் தாருக்கா திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

சுற்றுலாத் துறை நிலைபேறு சான்றிதழ்  வழங்கும் திட்டம் அறிமுகம்-UNDP, SLTDA Partnership to establish National Sustainable Tourism Certification Scheme

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையினால், கடந்த வாரம்  கொழும்பிலுள்ள ‘மூவ் என்ட் பிக்’ ஹோட்டலில் இவ்வைபவம் இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தத்திற்கு அமைய ஐநா அபிவிருத்தி திட்டத்தினால் (UNDP), இலங்கை சுற்றுலாத்துறையை உயிரியல் பல்வகைமை நிலைப்பிற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு. தொழில்நுட்பம் மற்றும் நிதி ரீதியாக உதவியளிக்கப்படும்.

2017 - 2020 ஆண்டில் இலங்கையின் ‘சுற்றுலாத்துறை உபாய திட்டத்தை’ (Tourism Strategic Plan - TSP) செயற்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் தேசிய நிலைபேறான சுற்றுலாத்துறை அத்தாட்சிப்படுத்தல் திட்டமானது நாட்டின் சுற்றுலா அபிவிருத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

சுற்றுலா பயணிகளின் தேவை, எதிர்பார்ப்பு, ஏனைய நாடுகளுடனான சுற்றுலாத்துறை போட்டித் தன்மை என்பன நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

சுற்றுலாத்துறையானது நாட்டிற்கு பாரிய அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகின்ற போதிலும், முறையாக திட்டமிடப்படாத சுற்றுலாத் துறை தொடர்பான திட்டங்கள் பாரிய எதிர்மறை விளைவுகளையே தோற்றுவிக்கும். இதன் காரணமாக சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் சுற்றுலா துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான உபாயங்களை கையாண்டு வருகின்றது.  இதன் பெறுபேற்றை அனுபவ ரீதியாக ஒரு சில சுற்றுலா தலங்களில் காணக்கூடியதாக இருப்பது கண்கூடு.

உலகளாவிய ரீதியில் நிலைபேறான சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தின் தேவை, உணரப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு, இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத் தலங்களுக்கான கேள்வியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே NSTCS திட்டமானது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் முக்கிய இடத்தை வகிக்கின்றது என சமாரி மயிகே (Chamarie Maeige) தெரிவித்தார்.

சுற்றுலாத் துறை தொடர்பான இணையதளமான ‘Lonely Planet’ ஆனது, 2019 ஆம் ஆண்டின் சுற்றுலாதலங்களில் பார்வையிட வேண்டிய இடங்களில் இலங்கைக்கு முதல் இடத்தை வழங்கியுள்ளது. அத்துடன் 2019 பிபிசியின் சிறந்த 15 உணவுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, 1.3 மில்லியன் சமூக வலைத்தள பதிவுகளில் ஆசியாவில் உள்ள நகரங்களில் புகைப்படம் எடுக்க அதிக விருப்பம் கொண்ட நகரமாக கொழும்பு நகரம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் அடிப்படையில், சுற்றுலாத்துறையை தொடர்பில் இலங்கைக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க விடயமாகும் அதற்கமைவாக NSTCS திட்டத்தின் அவசியம் மேலும் வலுவடைந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அனைத்து சுற்றுலா துறை தொடர்பான சேவை வழங்குனர்களில் முதல் கட்டமாக தங்குமிட சேவை வழங்குனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் தொகுதி ஹோட்டல் சேவை வழங்குனர்கள் இந்த சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் நிலைபேறான தன்மை தொடர்பில், அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனவிலங்குகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நிலைபேறான அபிவிருத்தி ஆனது இலங்கை அபிவிருத்தி செய்வதற்கு அத்தியவசியமாகும் என சுட்டிக் காட்டியதோடு எமது மூலோபாய திட்டமானது, நிலைபேறான வகையில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவது தொடர்பான விடயங்களை இனங்காணுவதாகும் என தெரிவித்தார்.

சிறந்த மகிழ்ச்சிகரமான சுற்றுலா தலங்களை உருவாக்குவதன் மூலம் இதனை அடைந்து கொள்ளலாம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...