சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா? | தினகரன்


சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா?

உலகிலுள்ள அனைவருக்கும் கூகிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சையின் உத்தியோகத்தின் மீது ஒரு கண். உலகில் மிக அதிக ஊதியம் பெறும் உத்தியோகங்களில் இதுவும் ஒன்று.

இதில் விசித்திரம் என்னவெனில், யாரோ ஒருவர் வணிக வலையமைப்பு சமூகவலைத்தளமான 'லிங்கிடுஇன்' தளத்தில் இந்த வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போலி பதவி வெற்றிடத்தை உருவாக்கியுள்ளார். அது உண்மை என நம்பிய பலர் அந்த வலையில் விழுந்ததுடன் அந்த பதவிக்கு விண்ணப்பித்தும் உள்ளனர்.

ஆனால் எப்படி, ஏன் இந்தத் தவறு நடந்தது?சுந்தர்பிச்சையின் கூகிள் சி.ஈ.ஓ பதவி வெற்றிடத்திற்கான பதிவு ஒரு பாதுகாப்பு குறைபாடு காரணமாக இடம்பெற்றுள்ளது. இதை 'லிங்கிடுஇன்' தளமும் ஒப்புக் கொண்டது. இந்தக் குறைபாட்டின் காரணமாக எந்தவொரு நிறுவனத்தின் 'லிங்கிடுஇன்' பக்கத்திலும் அதிகாரபூர்வ பதிவை இடுவதற்கு பயனர்களை அனுமதிக்கும். இந்தக் குறைபாடானது டச்சு நாட்டைச் சேர்ந்த ரெக்ரூட்டர் மைக்கேல் ரிஜண்டர் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக 'லிங்கிடுஇன்' தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சிறியஅளவிலான பணம் செலுத்தும் எவரும் 'லிங்கிடுஇன்' தளத்தில் பதவி வெற்றிட பதிவை இட முடியும். இது மிகவும் எளிதானது. வேலை தரும் நிறுவனம் போன்ற ஒரு சில விபரங்களை மட்டும் நிரப்ப வேண்டும். இங்கு தான் பிரச்சினையே உள்ளது. எல்லோரும் தாங்கள் தெரிவு செய்த நிறுவனங்களுக்காக பதவி வெற்றிட பதிவுகளை செய்ய முடியும்" என்கிறார் அவர்.

மேலும் இந்த செயலியானது விண்ணப்பங்களை 'லிங்கிடுஇன்'- இற்கு அனுப்ப பரிந்துரைத்தாலும், கூகிள் சி.ஈ.ஓ பணியிடம் போல பயனர்கள் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு தனிப்பயன் இணைப்புகளை (Custom links) உருவாக்கிக் கொள்ளலாம்.

கூகிள் பிரதான நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பதவி போலவே, 'லிங்கிடுஇன்' சி.ஈ.ஓ பதவிக்கு போலி வேலைவாய்ப்பை பின்னர் உருவாக்கி காண்பித்தார் மைக்கேல். இதில் மோசமான விசயம் என்னவெனில் , மேலும் கொஞ்சம் பணத்தை செலவளித்தால் இந்த போலி பதிவை அதிக நபர்களை சென்றடைய வைக்க முடியும்.

மைக்கேல் தனது பதிவில் குறிப்பிட்டபடி, இத்தகைய போலி பதவி வெற்றிட பதிவுகள் பங்குச் சந்தையையும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளையும் தள்ளாட வைக்கும் திறன் கொண்டவை. ஒரு நிறுவனம் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியை மாற்றுவதற்கு முயன்று வருகிறது என்பது, அந்நிறுவனத்துக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தக் கூடும்.

இந்த குறைபாடு குறித்த பதிவுக்கு பதிலளித்த லிங்கிடுஇன், " இதை எங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி மைக்கேல் " என்று தெரிவித்துள்ளது. "நாங்கள் அந்த போலியான பதிவை அகற்றியுள்ளோம் மற்றும் இந்த பதிவை நேரடியாக பதிவிட அனுமதித்துள்ள குறைபாட்டையும் சரிசெய்து வருகிறோம்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே சுந்தர் பிச்சை மற்றும் ஜெஃப் வீனிர் இருவரும் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதால் விரைவில் அவற்றை நிரப்ப எந்தவொரு வெற்றிடமும் இல்லை.


Add new comment

Or log in with...