முஸ்லிம் விவாக சட்ட விவகாரம்; 95% விடயங்களில் உடன்பாடு | தினகரன்

முஸ்லிம் விவாக சட்ட விவகாரம்; 95% விடயங்களில் உடன்பாடு

இன்று இறுதி அறிக்கை தயாரிப்பு  

முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களுக்கும் உலமா சபைக்கும் இடையில் நடந்த சந்திப்பில் 95 வீதமான விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.  

இன்று (31) இறுதி முடிவு எட்டப்பட்டு நீதி அமைச்சர் தலதா அதுகோரளவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.   முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தை திருத்துவது தொடர்பில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராய நால்வரடங்கிய குழு வொன்று நியமிக்கப்பட்டது. இதில் அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உலமா சபை தலைவர் ரிஸ்வி ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்தக் குழு நேற்றும் நேற்று முன்தினமும் கூடி நீண்ட நேரம் ஆராய்ந்தது சில விடயங்களில் இழுபறி நிலை ஏற்பட்டாலும் பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டதாக அறிய வருகிறது.

திருமண வயது,பெண்ணின் உடன்பாடு உட்பட பல விடயங்களில் முஸ்லிம் எம்.பிகளுக்கும் உலமா சபைக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டதாக அறிய வருகிறது. பெண் காதி நீதவான்களை நியமிப்பது தொடர்பில் இரு தரப்பிற்கும் இடையில் உடன்பாடு ஏற்படவில்லை எனவும் இது தொடர்பில் மாற்றுவழி காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் பைசர் முஸ்தபா கூறினார். இன்றுடன் அறிக்கை கையளிப்பதற்காகன காலக்கெடு நிறைவடைவதுடன் இது தொடர்பில் இன்று தீர்க்கமான முடிவு எட்டப்பட்டு இறுதி அறிக்கை நீதி அமைச்சருக்கு கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, முஸ்லிம் சிவில் அமைப்புகள் உலமா சபைக்கு சில யோசனைகளை கையளித்துள்ளது.திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்துவது அடங்கிய சில யோசனைகளுக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

இந்த யோசனைகளை முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி அடங்கலான குழுவினர் நேற்று முன்தினம் கையளித்திருந்தார்கள். (பா)

எம்.ஏ.எம்.நிலாம், எம்.எஸ்.பாஹிம்


Add new comment

Or log in with...