துணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு | தினகரன்

துணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு

துணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு-VAT for Fabric Reduced from 15% to 5%

 

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (18) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று (17) அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டுள்ளார்.

துணிக் கைத்தொழிலில் ஈடுபடுவோரின் கோரிக்கைக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் துணிகள் மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த 15% VAT வரி, 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இது வரை இறக்குமதி செய்யப்படும் துணி கிலோ ஒன்றுக்கு ரூ. 100 செஸ் வரி அறவிடப்பட்டு வந்தது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் பொருட்கள் மீதான 15% VAT வரி அமுல்படுத்தப்பட்டு, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க VAT சட்டம் திருத்தப்பட்டு, 2018 ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் துணிகளும் VAT வரிக்கு உட்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சிறு பரிமாண தைத்த ஆடை கைத்தொழிலாளர்கள், வர்த்தகர்கள் இறக்குமதியாளர்கள் தாம் அதிக சுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

என்டர்பிரைசஸ் ஶ்ரீ லங்கா, கடன் திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் சுயதொழிலாளர்களை உருவாக்குவதனை அடிப்படையாகக் கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள், தைத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் துணிகள் மீதான ​​VAT வரி குறைக்கப்படுவதன் மூலம், அவர்களுக்கு விசேட சலுகை கிடைக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம், தற்போது, VAT வரிக்கு உட்படாத சிறிய மற்றும் நடுத்தர பரிமாண ஆடை உற்பத்தியாளர்களும், அவர்களுக்கு அவசியமான, துணிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகை கிடைக்கும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 


Add new comment

Or log in with...