130 குப்பை கொள்கலன்களையும் பிரிட்டனுக்கே திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி பணிப்பு | தினகரன்

130 குப்பை கொள்கலன்களையும் பிரிட்டனுக்கே திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி பணிப்பு

பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள 130 குப்பை கொள்கலன்களையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.  

சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்படி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

பிரிட்டனிலிருந்து 2017இலிருந்து 2487 மெற்றிக்தொன் கழிவுகள் 12 தடவைகளில் இலங்கைக்கு வந்துள்ளன. இவை 130 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு வந்தோர் தொடர்பில் இதுவரை சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.  

இந்த நிலையில் நாட்டில் தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.  

 2013.07.11 ஆம் திகதி நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கிணங்க நாட்டிற்குள் எதனையும் கொண்டுவரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி வர்த்தமானியில் அப்போதைய நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவே கையொப்பமிட்டுள்ளதாகத் தயாசிறி தயசேகர தெரிவித்தார்.  

இது நாட்டின் கைத்தொழில் துறையை பாதிப்படையச் செய்வதுடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்த வர்த்தமானி வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...