Home » ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் சந்தித்து கலந்துரையாடல்

by Rizwan Segu Mohideen
January 21, 2024 8:36 am 0 comment

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (20) இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது உதவும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், இரு நாட்டு பாராளுமன்ற விவகாரங்களை ஆய்வு செய்வதற்கு இரு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டிருந்தார். அந்தப் பதிவில் “கம்பாலா நகரில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் பாராட்டத்தக்கது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை ‘சாகர்’ கொள்கை பிரதிபலிக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள பல அரச தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT