தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே | தினகரன்


தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே

தமிழ் மக்களின் எத்தகைய பிரச்சினையென்றாலும் குரல்கொடுத்து வருவது த.தே.கூட்டமைப்பு மாத்திரமே. ஏனைய பெரும்பான்மையின அல்லது மாற்றினக் கட்சிகள் ஒரு போதும் தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்காது. குரல்கொடுக்கப் போவதுமில்லை எனவே த.தே.கூட்டமைப்பைப் பலப்படுத்துங்கள் என  கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நேற்று(26) காரைதீவில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.  

குறைவீடுகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் காரைதீவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 204பயனாளிகளுடனான சந்திப்பு நேற்று காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.  

குறைவீடுகளை புனரமைப்பதற்காக என்னால் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவத்திற்கு ஒரு சிலர் இலஞ்சம் வாங்கியதாக முறைப்பாடு வந்துள்ளது. அப்படி யாராவது இலஞ்சமாக பணம் வாங்கியிருந்தால் இங்கு பயமில்லாமல் பகிரங்கமாகக் கூறலாம்.அவரை கட்சியிலிருந்தே விலக்கிவிரட்டவும் தயாராகவுள்ளேன். மேலும் இந் நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு சிறையில் போடவும் தயங்கமாட்டேன்.

அவர்  மேலும் உரையாற்றுகையில்: அம்பாறை மாவட்ட தமிழ்  மக்களின் வாக்குகள் எந்தக் காரணம் கொண்டும் பெரும்பான்மையின கட்சிகளுக்கு ஒரு போதும் அளிக்கப்படக் கூடாது. அப்படி வாக்களிக்கத் தவறினால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படும். அதனால் எதிர்காலத்தில் பல தரப்பட்ட பிரச்சினைகளை சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டிவரும்.  

ஏனைய சமூகங்கள் எமது தமிழ் மக்களை ஏறிமிதித்து அடிமைகளாக நடத்த முற்படுவார்கள்.நிலச்சூறையாடல், நிலஅபகரிப்பு உள்ளிட்ட உரிமைப் பிரச்சினைகள் கிடப்பில் போடப்படலாம். அபிவிருத்தி கூட இடம்பெறாது. எனவே இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் பெரும்பான்மையின கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

காரைதீவு குறூப் நிருபர்  

 

 


There is 1 Comment

பத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை ஆகியன் மீளமைக்கப்பட்டுவிட்டதா? வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டு விட்டதா? இலங்கையிலேயே வறுமை கூடிய மாவட்டம் வடமாகாணம். வறுமையை குறைக்க என்ன செய்தீர்கள்? கன்னியா வெந்நீரூற்று ஆக்கிரமிப்பை ஆரம்பத்திலேயே சம்பந்தன் ஐயா தடுத்திருக்கலாமே? தெருக்களுக்கு கிரவல் போடுவதும், மைதானத்திற்கு மண் போடுவதும் பசியை போக்குமா? குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறீகள் ஆனால் காரியம் ஆகவில்லையே! குரல் கொடுப்பதை நிறுத்தி சரியான இடத்தில் அழுத்தம் கொடுங்கள் என அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

Add new comment

Or log in with...