வெளிநாடுகளில் பட்டம் பெற்ற மருத்துவர்களை பதிவு செய்ய மருத்துவ சபைக்கு உத்தரவு | தினகரன்


வெளிநாடுகளில் பட்டம் பெற்ற மருத்துவர்களை பதிவு செய்ய மருத்துவ சபைக்கு உத்தரவு

16 பட்டதாரிகளின் அடிப்படை உரிமை மனு

தடை தாண்டல் பரீட்சையில் சித்தி பெற்றவர்களே தகுதி

உச்ச நீதிமன்று அறிவுறுத்தல்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை இலங்கை மருத்துவ சபையில் உடனடியாக பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

எம். பி. பி. எஸ். பட்டம் பெற்ற மருத்துவ பட்டதாரிகளையும் இலங்கையில் மருத்துவ பயிற்சிக்கான தடை தாண்டல் பரீட்சையில் (Act 16பரீட்சை) சித்தி பெற்றவர்களையும் பதிவு செய்யுமாறு நேற்று மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (23) ஆம் திகதி முதல் 30 நாட்களுக்குள் மருத்துவ தொழில் புரிபவர்களாக தேவைப்படும் தகைமைகளை நிறைவு செய்த மருத்துவ பட்டதாரிகளை இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்ய வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, எல். டி. பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட குழுமம் உத்தரவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் எம். பி.பி. எஸ். பட்டத்தை நிறைவு செய்த 16மருத்துவ பட்டதாரிகள்  தம்மை தற்காலிகமாக பதிவு செய்வதற்கு இலங்கை மருத்துவ சபை மறுத்தததன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக  மனுதார்கள் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

தங்களை இலங்கையில் மருத்துவ தொழில் புரிபவர்களாக தற்போது பதிவு செய்ய இலங்கை மருத்துவ சபை  மறுத்துள்ளதாக இவர்கள் தமது மனுக்களில் குற்றம் சாட்டியிருந்தனர். அரசியலமைப்பின் கீழ் தங்களுக்குள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் இந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இவர்களது அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் நேற்று இவ்வாறு மருத்துவ சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Add new comment

Or log in with...