மலையக அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்! | தினகரன்


மலையக அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, டொரிங்டன், அலுப்புவத்தை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு அப்பாவி மாணவிகள் கடந்த வாரம் மரணமடைந்தமை நுவரெலியாவை மாத்திரமல்லாமல் முழுநாட்டையும் சோகத்துக்கு உள்ளாக்கியிருந்தது. டொரிங்டன் பிரதேசம் அம்மாணவிகளின் இழப்பினால் ஏற்பட்ட சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் இடம்பெற்று விடக் கூடாது என்பதுதான் மக்களின் பிரார்த்தனையாக இருக்கின்றது.

டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷ்மி, மதியழகன் சங்கீதா ஆகிய இரு மாணவிகளும் வழமை போன்று கடந்த 18ம் திகதி பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் வழமையாகக் கடந்து செல்லும் நீரோடையில் வழமைக்கு மாறாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

இவ்வாறான நிலையில், இம்மாணவிகளுடன் வருகை தந்த மாணவர் ஒருவர் அந்நீரோடையை ஒருவாறு கடந்து சென்றார். இந்த இரு மாணவிகளும் தம் கரங்களைக் கோர்த்துக் கொண்டு நீரோடையைக் கடக்க முயன்ற போது அந்தப் பரிதாபம் இடம்பெற்றது. அவர்கள் இருவரும் வெள்ள நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள் விரைந்து சென்று மாணவிகளைத் தேடிக் காப்பாற்றுவதில் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களோடு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர். ஆனாலும் சம்பவ தினத்தன்று மாலையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான மதியழகன் லக்ஷ்மியை சடலமாகவே மீட்க முடிந்தது. இந்தச் சடலம் மேற்படி சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் மீட்கப்பட்டது. இதன் விளைவாக பிரதேசமெங்கும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்பட்டது.

ஆனால், அடுத்த மாணவிக்கு என்ன நேர்ந்துள்ளது? அவர் உயிர் தப்பினாரா? அல்லது அவரும் உயிரிழந்தாரா? என்ற கேள்வி பொலிஸாரையும் பிரதேச மக்களையும் குடைந்தெடுத்தது. இரவாகியும் சங்கீதா என்ன ஆனார் என்ற கேள்வி திகிலாகவே நீடித்தது.

இவ்வாறான நிலையில் வெள்ளநீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட சங்கீதாவை தேடும் பணி இரண்டாவது நாளும் (19ம்திகதி) தொடர்ந்தது. ஆனால் அவரும் சடலமாகவே மீட்கப்பட்டார். இவரது சடலம் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் டொரிங்டன் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

இதன் விளைவாக பிரதேசத்தில் மாத்திரமல்லாமல் முழுநாட்டிலும் சோகமும் கவலையும் ஏற்பட்டது. இது பெரும் வேதனைக்குரிய விடயமாகவே அமைந்திருந்தது.

அதேநேரம் இதேபோன்றதொரு சோகம்மிக்க சம்பவம் கடந்த வருடம் கந்தப்பளை பகுதியில் இடம்பெற்றது. அந்தச் சம்பவத்திலும் பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த மாணவியொருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தமை தெரிந்ததே.

இதன்படி இவ்வாறு ஆபத்துகள் நிறைந்த நீரோடைகளும் , பாலங்களும் மலையகத்தின் பல பிரதேசங்களிலும் காணப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. அலுப்புவத்​ைத பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகளது மரணத்துக்குக் காரணமாக அமைந்த நீரோடையானது டொரிங்டன் பிரதேசத்தில்தான் உள்ளது. டொரிங்டன் பிரதான பாதையிலிருந்து பாலமொன்றின் ஊடாக ஆற்றைக் கடந்து செல்லும் போது 5 தோட்டப் பகுதிகளைக் கடக்க வேண்டும். இங்கு சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆரம்ப காலம் தொட்டு இக்குறுக்கு வீதியை தமது போக்குவரத்துத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் உட்பட வளர்ந்தவர்கள் சகலரும் பயன்படுத்தும் பாதை இது.

ஆனால் சிறுமழை பெய்தாலும் இந்நீரோடை நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்தோடும். ஏனெனில் பாலத்துக்கு அடியில் நீர் ஓடக் கூடிய பகுதி குறுகிய இடை​ெவளியைக் கொண்டதாக உள்ளது. அதனூடாக அதிக நீர் வழிந்தோட முடியாத நிலைமை காணப்படுவதால் மேலதிக நீர் பாலத்துக்கு மேல் பெருக்கெடுக்கின்றது. இந்த அவலநிலை குறித்தும் அதனால் தோற்றம் பெறும் பாதிப்புக்கள் தொடர்பிலும் பிரதேச மக்கள் அரசியல்வாதிகளிடமும், தோட்ட முகாமைத்துவத்திடமும், அதிகாரிகளிடமும் பல முறை எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் அவர்களது முறைப்பாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. அதன் விளைவாகவே யாதுமறியா அப்பாவிச் சிறுமிகள் இவ்வாறு பலியாகியுள்ளனர். இவ்வாறான உயிரிழப்புகள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் அதற்கான வாய்ப்புகள் மலையகத்தின் பல இடங்களிலும் காணப்படுகின்றன.

அதன் காரணத்தினால் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தோட்ட முகாமையும், அரசியல்வாதிகளும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும். அப்போது இவ்வாறான மரணங்களை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.மலையக அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை என்ற மனக்குறை அம்மக்கள் மத்தியில் நிலவுவதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டாமலிருக்க முடியாது.


Add new comment

Or log in with...