கொழும்பு -தம்புள்ளை அணிகள் இன்று பலப்பரீட்சை | தினகரன்


கொழும்பு -தம்புள்ளை அணிகள் இன்று பலப்பரீட்சை

19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட்

கண்டி அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான தீர்க்கமான போட்டியில் 7 ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்ற தம்புள்ளை அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (23) தம்புள்ளையில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் கொழும்பு அணியை தம்புள்ளை எதிர்கொள்கிறது.

வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலையிலேயே (21) ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் தம்புள்ளை மற்றும் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தம்புள்ளை அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு முதல் வரிசையில் வந்த ரவிந்து ரசன்த 32 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார்.

மத்திய வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை கொடுக்க ஒரு கட்டத்தில் தம்புள்ளை அணி 118 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் பின்வரிசை வீரர்களான லக்ஷான் கமகே மற்றும் அஷியன் டானியல் 8 ஆவது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன் போது லக்ஷான் கமகே 55 ஓட்டங்களையும் அஷியன் டானியல் 30 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் கண்டி அணி சார்பில் ஒன்பது வீரர்கள் பந்துவீசியபோதும் கவிந்து நதீஷான் 10 ஓவர்களுக்கும் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. காலியுடனான போட்டியில் 3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட கவிந்து விக்ரமசிங்க 3 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார்.

மறுமுனையில் துடுப்பாடிய துனித் ஜயதுங்க மற்றும் முதல் வரிசையில் அபிசேக் ஆனந்தகுமார கணிசமான ஓட்டங்களை பெற்றபோதும் அதனை அரைச்சதமாக மாற்றுவதற்கு தவறினர்.

இந்நிலையில் கண்டி அணி 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் மத்திய வரிசையில் துடுப்பாட வந்த வத்தளை அந்தோனியார் கல்லூரியின் அவிஷ்க தரிந்து வேகமாக ஆடி 54 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை கொடுத்தார்.

எனினும் யசிரு ரொட்ரிகோ வீசிய 46 ஆவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் பறிபோனதை அடுத்து கண்டி அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. இறுதியில் கண்டி அணி 48.1 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தம்புள்ளை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய சுதீர திலகரத்ன மற்றும் டானியல் தலா 3 விக்கெட்டுகளையும் ரொட்ரிகோ 2 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.


Add new comment

Or log in with...