உயிராபத்து ஏற்பட காரணம் உதாசீனம்! | தினகரன்


உயிராபத்து ஏற்பட காரணம் உதாசீனம்!

டெங்கு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் அரசாங்க வைத்தியசாலைகள் முன்னணியில்; ஆனாலும் இந்நோயின் தன்மை பற்றிய அறிவீனமும் அசமந்தமுமே வீணான மரணங்களுக்கு காரணமாகின்றன

டெங்கு வியாதியில் இருந்து உயிராபத்தைத் தவிர்த்து மீள்வது எவ்வாறு? ஆலோசனைகள் தருகிறார் வைத்தியர் எம்.பி.ஹாலித்

இலங்கை மக்களை தற்போது அச்சத்திற்குள் ஆழ்த்தியிருக்கின்றது டெங்கு நோய். இந்நோயினால் 29,123 பேர் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு வேலைத் திட்டத்தின் பேச்சாளர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

டெங்கு ஒழிப்பிற்கான தேசிய வேலைத் திட்டத்தினை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது மிக வேகமாக ஆரம்பித்துள்ளன.டெங்கு பற்றியும், அதனால் ஏற்படும் உயிர் ஆபத்துகள் பற்றியும் பொதுமக்களிடையே தெளிவுபடுத்துவது இன்று அவசியம்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு மத்திய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியான எம்.பி.ஹாலித் டெங்கு தொடர்பான விடயங்களை தினகரனுக்காக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

டெங்கு ஆபத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்காக மூன்றே மூன்று வழிகள் இருப்பதாக வைத்தியர் எம்.பி.ஹாலித் தெரிவிக்கிறார்.இம்மூன்று விடயங்களை சரிவர பின்பற்றுவதால் டெங்கு ஆபத்தை தவிர்க்க முடியும் என்கிறார் அவர்.

1. காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்குப் பிறகு, முழுமையான இரத்தக் கணிப்பு (full blood count) பரிசோதனை செய்தல் , அத்தோடு 3ம் , 4ம் , 5ம் நாட்களிலும் இந்தப் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

2. முழுமையான இரத்தக் கணிப்பு அறிக்கையில் பிளேட்டிலட் எனும் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்தியசாலையில் கட்டாயம் அனுமதித்தல்.

3. எந்தக் காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக், புரூபன், மெபெனமிக் அசிட் போன்ற மருந்து, மாத்திரைகளை பாவித்தல் கூடாது.

இம்மூன்று விடயங்களையும் சரிவர பின்பற்றுவதனால் டெங்கு உயிராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றார் டொக்டர் ஹாலித்.

குறிப்பாக அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற அலட்சியமே அநியாய மரணங்களுக்கு காரணம் என்பதனை அவரோடு உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது.

"டெங்கு காய்ச்சலானது டெங்கு வைரசினால் ஏற்படுகிறது, இக்காய்ச்சலில் உயிரைப் பறிக்கக் கூடிய ஒரு நிலை சிலரில் ஏற்படுகிறது. ஆனால் இந்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு மரணம் ஏற்படுவதை தடுப்பதற்கான மிகச் சிறந்த, பாதுகாப்பான வைத்திய முறை இன்று இலங்கையில் காணப்படுகின்றது" என்கின்றார் அவர்.

"அவ்வாறு இருந்தால் ஏன் மரணம் ஏற்படுகின்றது?" என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது "அதிக மரணங்களுக்கான காரணம் மேற்குறிப்பிட்ட விடயங்களில் நமது கவனயீனம், அசமந்தப் போக்கு" என்றார் .

வைத்தியர் தினகரனுடன் பகிர்ந்து கொண்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்குப் பிறகு, உடனடியாக முழுமையான இரத்தக் கணிப்பு பரிசோதனை செய்யாது விடுவதன் காரணமாகவே அதிகளவான டெங்கு மரணங்கள் ஏற்படுகின்றன. அதனை இன்னும் விரிவாகச் சொல்வதானால், சிலர் தனக்கு இருமல் மற்றும் தடிமன் காய்ச்சல்தான் வந்திருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். டெங்கு காய்ச்சலாக இருக்காது என இப்பரிசோதனையை செய்யாது முடிவெடுத்து விடுகின்றனர். சிலர் 2ம் நாளில் இப்பரிசோதனையை செய்து விட்டு அப்பரிசோதனை சாதாரணமாக இருந்து விட்டால் 3ம் , 4ம்நாட்களில் இரத்தப் பரிசோதனையை செய்யாது விட்டு விடுகின்றனர்.

சிலர் தத்தமது குழந்தைகள் மேல் கொள்கின்ற மிதமிஞ்சிய அன்பின் காரணமாக இரத்தம் எடுப்பதற்கு தயங்குகின்றனர்.தொடர்ச்சியாக ஊசி குத்த முடியாது, குழந்தை அழுகின்றது என அவர்கள் கூறுகின்றனர். எனவே இப்பரிசோதனையை தொடர்ச்சியாக 3ம் , 4ம் ,5ம் நாட்களில் செய்வதை அவர்கள் தவிர்த்துக் கொள்கின்றனர். இதனால் ஏற்படுகின்ற உயிர் ஆபத்து பற்றிய சிந்தனை அவர்களிடம் இல்லாமல் போகின்றது.

சிலர் தேவையில்லாமல் காய்ச்சலின் 1ம் நாளில் அதாவது 48 மணித்தியாலங்கள் முடிவதற்குள் இரத்தப் பரிசோதனை 2 அல்லது 3 தடைவைகள் செய்து விடுகின்றனர். இதனால் தேவையான போது செய்வதற்கு தயங்கி செய்யாமல் விடுகின்ற நி​ைலமை ஏற்படுவதுமுண்டு.

சிலர் காய்ச்சல் விட்டு விட்டது தானே... இனி இரத்தப் பரிசோதனை தேவை இல்லை என வைத்தியரின் அறிவுறுத்தலை தாங்களாகவே நிராகரித்து விடுகின்றனர்.

மேலும் சிலர் 4ம் நாள் காய்ச்சலோடு வைத்தியரிடம் வருவர். இரத்தப் பரிசோதனை செய்து வாருங்கள் என்று ஒரு பரிசோதனை துண்டைக் கொடுத்து, 'இப்போது உடனடியாக பரிசோதித்துக் கொண்டு வாருங்கள்' என்று அனுப்பினால், 'சரி டொக்டர் எடுத்து வருகின்றோம்' என்று போய் விடுவர். பின்னர் அடுத்த நாள் முழுமையான இரத்தப் பரிசோதனை அறிக்கையோடு மிகவும் அபாய நிலையில் நோயாளியை கொண்டு வருவர்.

'ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்றால் 'இரத்தப் பரிசோதனைக்குச் சென்றோம்; பிள்ளை அழுது விட்டது. வீட்டுக்குச் சென்று விட்டோம் இன்று காலையில்தான் பரிசோதனை செய்தோம்' என்பர்.

'அப்படியாயின் உடனடியாக இரத்தப் பரிசோதனை அறிக்கையை காண்பித்திருக்கலாம்தானே' என்று சொன்னால், 'பின்னேரம் 5மணிக்குத்தான் ரிப்போர்ட் தந்தார்கள்' என்பர்.

'அப்படியாயினும் உடனடியாக வந்திருக்கலாமே' என்று கூறினால் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறுவார்கள். அதாவது நேற்று மாலை 6 மணிக்கு இரத்தப் பரிசோதனை அறிக்கைக்காக அனுப்பப்பட்டவர்கள் இன்று இரவு 9 மணிக்குத்தான் அறிக்கையோடு வருவார்கள். மிக மோசமான நிலையில் அந்த நோயாளி இருப்பார்.

வைத்தியர் பதறிக் கொண்டு 'உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும்' என்றால், 'வெளியே வைத்து வைத்தியம் பார்க்க முடியாதா டொக்டர்?' என்று கேட்பர். பின்னர் ஒருவழியாகக் கதைத்து, பயமுறுத்தி வைத்தியசாலைக்கு அனுப்பினால் 11 மணிக்குப் பிறகுதான் வைத்தியசாலையை அடைவர்.

அவசரமாக குறித்த நோயாளியை பெரிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வசதிகள் குறித்த நேரத்தில் இல்லாமல் காணப்படும். உதாரணமாக அம்பியுலன்ஸ் பற்றாக்குறை...சில பெரிய வைத்தியசாலைகளும் பல்வேறு குறைநிறைகளைக் கொண்டிருக்கும்.தேவையான மிக முக்கியமான பரிசோதனைகள் கூட செய்ய முடியாமல் இருக்கலாம். எனவே நோய் வீரியமடைவதற்கு முன்னர் வைத்தியசாலையை அடைய வேண்டும்.

முழுமையான இரத்தக் கணிப்பு(full blood count) அறிக்கையில் பிளேட்டிலட் எனும் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130 ஐ விட குறைவடைந்தால் வைத்தியசாலையில் அனுமதிக்காது காலம் கடத்துவதால் நோயாளி உயிராபத்தை சந்திக்க வேண்டி ஏற்படுகிறது.

சிலர் பிளேட்டிலட் 130 ஐ விட குறைவடைந்த நோயாளியை வைத்தியசாலை வார்ட்டில் அனுமதிக்கக் கோரினால், 'இல்லை டொக்டர் வைக்க முடியாது, வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்கின்றனர் என்பர். அல்லது தாய், தந்தை தனியாக இருக்கின்றார் என்று ஏதாவது காரணம் கூறி , நாளை காலையில் வருகிறேன் என்பர். பின்னர் மிக அபாயகரமான நிலையில் அவர்கள் வைத்தியசாலையை அடைவர்.

சில வேளைகளில் வைத்தியர்கள் சில காரணங்களைக் கருத்தில் கொண்டு 150 இற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குருதிச் சிறுதட்டு காணப்படும் போதும் வைத்தியசாலையில் அனுமதிப்பர். எனவே உங்களை வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்க கோரினால் கட்டாயம் செவிமடுங்கள் என்பதே எனது அறிவுரை ஆகும். எந்தக் காரணம் கொண்டும் காய்ச்சலைக் குறைப்பதற்காக டைக்குளோபெனக், புரூபன், மெபெனமிக் அசிட் போன்ற மருந்துகளைப் பாவித்தல் கூடாது. ஆனாலும் சிலர் பாவித்து விடுகின்றனர் .இவ்வகையான மருந்துகள் மாத்திரைகளாக,பாணி மருந்துகளாக, அல்லது மலவாயிலில் வைக்கும் குளிசையாக காணப்படலாம்.

சிலர் வைத்தியர்களிடம் வந்து, 'காய்ச்சல் மிகக் கடுமையாக இருக்கின்றது. 2 தடவை மருந்து எடுத்து விட்டேன். காய்ச்சல் 3ம்நாளாகவும் விடாமல் காய்கின்றது' என்றும், 'மலவாயிலில் வைக்கும் அந்த குளிசையை தாருங்கள்' என்றும் வைத்தியர்களிடம் கேட்பர். அதற்காக கட்டாயப்படுத்துவர். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் கேட்காமல் எப்படியாவது ஏதாவது பாமசிகளில் அல்லது போலி வைத்தியர்களிடம் சென்றாவது எடுத்து பாவித்து விடுவர். பிள்ளைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படுவதற்க்குக் காரணம் இவ்வாறான பிழையான முறையை பின்பற்றுவதன் மூலமே ஆகும்.

பிழையான நம்பிக்கைகளினால் குறித்த நேரத்தில் வைத்திய ஆலோசனையைப் பெறத் தவறுதல் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்காமல் காலம் கடத்துதல்,போலி வைத்தியர்களிடம் மருந்துக்காக செல்லுதல்,உண்மையென உறுதிப்படுத்தப்படாத (ஆங்கில வைத்திய முறைகள் அல்லாத) வைத்திய முறைகள் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பி ஏமாற்றம் அடைதல்,

பிழையான உறுதிப்படுத்தப்படாத நம்பிக்கைகளினால் கவரப்பட்டு வைத்திய ஆலோசனையில் நாட்டமில்லாது விடல்...

இவையெல்லாம் டெங்கு மரணங்களுக்கான பிரதான காரணங்களாகும்.

டெங்கு வைரசின் காரணமாக மரணமடைதல் என்பது, வைரசினால் மூளை தாக்கப்படுதல் (என்செபலோபதி), இதயத்தசை அழற்சி (மயோகார்டைடிஸ்) போன்றவற்றினால் ஏற்படக் கூடும். இவ்வாறான நிலைகளில் நோயாளியை உயிர் பிழைக்க வைப்பது மிகவும் போராட்டம் நிறைந்தது.

அநேகமான மரணங்கள் நிகழ்வதற்கான காரணம் இரத்தக் குழாய்களில் உள்ள இரத்தத்தில் காணப்படும் பாய்மம், இரத்தக் குழாய்களை விட்டு தசைகளுக்குள் வெளியேறுவதால் ஏற்படும் அதிர்ச்சி நி​ைலமையினால் ஆகும்.இவ்வாறான மரணங்கள் மிக அதிகமாக ஏற்படுவதற்கான காரணம் சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு நோயாளி கொண்டு வரப்படாமல் இருத்தலாகும். குறித்த நேரத்தில் வைத்தியசாலையில் வழங்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் இவ்வகை மரணத்தை 100 வீதம் தடுக்கக் கூடியவை.

சிலரது மூளை, தசைகள் , போன்ற அங்கங்களில் இரத்தக் கசிவு ஏற்படுவதனால் அவர்கள் இறக்கின்றனர். இவ்வகையானவர்கள் நாம் மேற்கூறிய மருந்துப் பொருட்களை பாவிப்பதனால் , வைத்திய சிகிச்சை பலனின்றி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கூறியவற்றுடன் இன்னும் சில ஆலோசனைகளை சொல்வது பொருத்தாமாகவிருக்கும்.

*காய்ச்சல் தொடங்கிய நாளில் இருந்து ஐந்தாறு நாட்களுக்கு தொடர்ச்சியாக வைத்திய ஆலோசனையுடன் இணைந்து இருங்கள். பொதுவாக காய்ச்சல் விட்ட பிறகே(காய்ச்சல் ஏற்பட்ட 3ம் 4ம் நாட்களுக்குப் பிறகு) டெங்கு காய்ச்சலின் அபாயகரமான நிலை ஏற்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்க.

*வைத்தியர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காரியத்தை செய்து முடியுங்கள். உதாரணமாக உடனடியாக இரத்தப் பரிசோதனையை கோரினால், உடனடியாக செய்து காட்டுங்கள்.

*மறுநாள் காலை இரத்தப்பரிசோதனையைக் கோரினால், மறுநாள் காலையிலேயே அதனை செய்து காட்டுங்கள். இவ்வாறு செய்து காட்ட முடியாவிட்டால் வைத்தியருடன் ஆலோசியுங்கள் . காலையில் இரத்த மாதிரியை பெற்றுக் கொண்டு மாலையில்தான் அறிக்கையைத் தருவோம் என்றால் அப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனையை செய்யாமல், உடனடியாக அந்த இரத்தப் பரிசோதனையை செய்யக் கூடிய இடங்களுக்கு செல்லுங்கள். அல்லது இவ்விரத்தப் பரிசோதனை வசதியுள்ள அரச வைத்தியசாலைகளுக்குச் செல்லுங்கள் (இன்று அதிகமாக எல்லா வைத்தியசாலைகளிலும் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

*இரத்தத்தில் 100 ஐ விட குறைவாக பிளேட்டிளட்ஸ் காணப்பட்டாலோ அல்லது நோயாளியின் நோயின் தன்மை அதிகமாகக் காணப்பட்டாலோ அரசின் பெரிய வைத்தியசாலைகளில் (பயிற்சி வைத்தியர்கள் வேலை செய்யும் வைத்தியசாலைகள்) வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*இவ்வாறான நிலைகளில் நீங்கள் சிறிய வைத்தியசாலைகளில் வைத்திருக்கப்பட்டால் வைத்தியருடன் கலந்துரையாடி மாற்றத்திற்கு பரிந்துரையுங்கள் அல்லது வைத்தியர் உங்களை மாற்றுவதற்கு விரும்பினால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

*வைத்தியசாலைகளுக்கு காலையில் நேரகாலத்தோடு செல்லுங்கள்.சில வைத்தியசாலைகளில் தேவையான முக்கியமான பரிசோதனைகளைக் கூட தேவையான நேரங்களில் செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கியநிலை காணப்படுகின்றது என்பதை மறந்து விடாதீர்கள். பொது விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் சில முக்கியமான விடயங்களை கையாள்வதில் பல இடர்பாடுகள் காணப்படும் என்பதை நினைவில் கொள்க. உதாரணமாக ஆளணிக் குறைபாடுகள் மற்றும் தேவையான பரிசோதனை செய்வதில் கட்டுப்பாடுகள் காணப்படலாம்.

*மருத்துவ வசதியை பெற்றுக் கொள்வதில் சிரமமுள்ளவர்கள் அதாவது பின்தங்கிய கிராமங்களில் வசிப்போர் வைத்தியசாலைகளில் முன்கூட்டியே அனுமதியை பெற்றுக் கொள்ளுங்கள்.

*அதிகளவான டெங்கு நோயாளர்கள் அரச வைத்தியசாலைகளில்  தற்போது நிரம்பிக் காணப்படுகின்றனர். நீங்கள் பொறுமையுடனும், அவதானத்துடனும் செயற்படுங்கள்.நோய் நிலைமை சம்பந்தமாக வைத்தியரிடம், தாதிமாரிடம் அடிக்கடி கேட்டு அறிந்துகொள்ளுங்கள். மிகவும் அதிகமான நோயாளர்கள் காணப்பட்டாலும் கூட அரசின் பெரிய வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். தனியார் வைத்தியசாலைகளில் டெங்கு நோய்க்கு தங்கி நின்று சிகிச்சை பெறுவதை தவிர்ப்பது சிறந்தது.

*டெங்கு காய்ச்சலுக்கு உலகின் தற்போதைய, உறுதிப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த வைத்திய முறையே எமது அரசாங்க வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுகின்றது என்பதை நினைவிற் கொள்ளவும்.

*எவ்வாறாயினும் வருமுன் காப்பதே மிகச் சிறந்தது.அதற்கான சகல வழிகளையும் பின்பற்றுங்கள்.  அம்முறைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறான பூரணமான தகவல்களை மக்களுக்காக தினகரனுடன் பகிர்ந்து கொண்டார் வைத்தியர் எம்.பி.ஹாலித்.

றிசாத் ஏ காதர் - ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...