மகளுக்கான மணமகனை தெரிவு செய்யப் போகிறார் நளினி | தினகரன்


மகளுக்கான மணமகனை தெரிவு செய்யப் போகிறார் நளினி

ந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு, அவருடைய மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஒரு மாதம் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான 'பரோல்' வழங்கப்பட்டிருக்கிறது. நளினி தரப்பில் 6 மாதம் 'பரோல்' கேட்கப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாதம் மட்டுமே வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, பரோல் திகதி மற்றும் நளினி தங்கும் இடம், இரண்டு நபர்களின் பிணை உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை கேட்டுள்ளதையடுத்து, நளினியின் தாய் பத்மா மற்றும் குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோரின் உறுதிமொழிப் பத்திரத்தை சிறை நிர்வாகத்திடம் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ஒப்படைத்தார். இதுதவிர நாலைந்து மணமகன்களின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மணமகனைத் தெரிவு செய்வார் என்று புகழேந்தி கூறியிருந்தார்.

இந்த வாரம் நளினி எப்போது வேண்டுமானாலும் பரோலில் வெளியே வருவார் என்ற நிலையில், அவருடைய அம்மா பத்மா விகடனிடம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"புதன்கிழமைதான் என் மகள் நளினியைப் பார்க்கப் போகிறேன். அதற்கப்புறம்தான் என் பேத்திக்கு மாப்பிள்ளை யார், கல்யாணம் எப்போது போன்ற விடயமெல்லாம் தெரியவரும். எனக்கு சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. எப்போது என் பொண்ணைப் பார்ப்பேன். அணைச்சுக்கிட்டுப் படுப்பேன்னுதான் ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றார் தாயார் பத்மா.

"அது நடக்கணும்னு கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். நான் முன்னர் தொழில் செய்த தாயார் என்பதால், இரவில் மட்டும்தான் நளினிக்குப் பால் கொடுக்க முடியும். அதனால, 3 வருஷம் வரைக்கும் என் பொண்ணு இரவெல்லாம் என்னை அணைச்சுக்கிட்டே தூங்குவா. அந்த ஞாபகங்களெல்லாம் மனசுக்குள்ள வந்துட்டே இருக்கு. அவளுக்கு எத்தனை வயசானாலும், நான் உயிரோட இருக்கிறவரைக்கும் அவ குழந்தைதானே...''

பல வருடங்களுக்குப் பிறகு மகளைப் பார்க்கப் போவதாலும், பேத்தியின் திருமணத்தை நடத்தப் போவதாலும், மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார் நளினியின் அம்மா பத்மா. நளினி பரோலில் வருவது இது இரண்டாவது முறை. 2016-இல் தன் தந்தையின் ஈமக்கிரியைக்காக 12 மணி நேரம் பரோலில் வந்திருந்தார் நளினி.


Add new comment

Or log in with...