எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதில் சிறைச்சாலைகள் பாரிய சவால் | தினகரன்


எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதில் சிறைச்சாலைகள் பாரிய சவால்

நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

அண்மையில் கடற்படையினரால் கடலில் வைத்து 270கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பரிசோதனை செய்தபோது அந்த நடவடிக்கை வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளமை  தெரியவந்திருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான விசேட விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  

நேற்று (22) முற்பகல் மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயம் கல்வியாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இலவச கல்வியின் காரணமாக இன்று நாட்டில் அனைத்து பிள்ளைகளினதும் கல்வி உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்று அரசியல் துறையிலும் சமூகத்திலும் குற்றமிழைத்து வருகின்றவர்கள் தனக்கு எதிராக திரும்பியிருப்பது, தான் குற்றங்களுக்கு எதிராக இருப்பதன் காரணத்தினாலாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

ஊழல், மோசடி, திருட்டு மற்றும் நாட்டினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை சீரழிக்கும் அனைத்து வகையான கடத்தல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு தான் கடுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , தனக்கெதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை கைவிடப்பபோவதில்லை எனவும் குறிப்பிட்டார்.      


Add new comment

Or log in with...