நான்கு தடைகளைப் பிறப்பித்து மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | தினகரன்


நான்கு தடைகளைப் பிறப்பித்து மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

படம்: அப்துல் சலாம் யாசீன்

 கன்னியாவில் இந்துக்களின் பூஜைகளுக்கு அனுமதி

விகாரை கட்டுவதற்கு இடைக்காலத் தடை

13ஆம் திருத்தச் சட்டத்தை முன்னிறுத்தி சுமந்திரன் வாதம்

ரி.விரூஷன், அன்புவழிபுரம், ரொட்டவெவ தினகரன் நிருபர்கள்

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்குத் தடைவிதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று (22) அதிரடித் உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரம், ஆடிஅமாவாசை பூஜைகளைத் தடையின்றி நடத்துவதற்கும் இந்து பக்தர்கள் செல்வதைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைப்பது தொடர்பான தீர்ப்பினை ஒத்திவைத்த நீதிமன்றம், நான்கு விடயங்களுக்கு இடைக்கால தடைவிதித்து தற்போதைக்கு ஆலயத்தின் சிக்கலைத் தீர்த்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

மேலும், அரசியலமைப்பின் 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் காணி தொடர்பாக எவருக்கும் உத்தரவுகளை வழங்க முடியும் என அரசியலமைப்பை சுட்டிகாட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனது

வாதத்தினை ஏற்று நீதிமன்றம் மேற்படி தடையுத்தரவுகளைப் பிறப்பித்தது.

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்று வரும் பௌத்த விஹாரை அமைக்கும் பணிகளுக்கு தடையுத்தரவு பிறப்பித்து அங்கு இந்து பக்தர்கள் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி அக் கோவிலின் நம்பிக்கை பொறுப்பாளர் கோகிலவாணி ரமணி அம்மா திருகோணமலை மேல் நீதிமன்றில் தடையாணை மனுவினை தாக்கல் செய்தார்.

கடந்த வௌ்ளிக்கிழமை (19ஆம் திகதி) தாக்கல் செய்யப்பட்ட இத் தடையாணை மனுவில் எதிர்மனுத்தாரர்களாக தொல்பொருட் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இத் தடையாணை மனுமீதான விசாரணையானது நேற்றைய தினம் காலை திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது மனுத்தாரர் தரப்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் சிரேஸ்ட சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி சுமந்திரன் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இதன்படி குறித்த வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயமானது நீண்ட கால வரலாறுடையது. இது திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் ஆகும். அதன் நம்பிக்கைப் பொறுப்பாளராக கோகிலவாணி ரமணி அம்மா உள்ளார்.

இது இந்துக் கோயிலுக்குரிய நம்பிக்கைப் பொறுப்பு காலாகாலமாக இருந்துவந்துள்ளது. இராவணன் காலத்திலிருந்தே உள்ளது. இப் பிள்ளையார் ஆலயம் 150 வருட காலமாக உள்ளது.

இவ்வாறான நிலையில் தொல்பொருள் திணைக்களம் இதனைக் கைப்பற்றி வேறு முகவர்களூடாக பக்தர்கள் செல்வதற்கு டிக்கெட் அறவிடுவதுடன் அங்கு விஹாரை ஒன்றை கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக இதற்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது தென்கையிலை ஆதீன முதல்வர் மீதும், இவ் அம்மையார் மீதும் சுடுதண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

எனவே, இந்த ஆவணங்கள் தொடர்பான உரித்துடையவர்கள் அதனை பயன்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களமும் வேறு எவரும் தடைசெய்யக்கூடாது என்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும்.

மேலும், இந்து பக்தர்கள் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் நீக்கப்படுவதற்கும், ஆலயத்தில் புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அத்துடன் அவ்வாறு தடையுத்தரவுகளை வழங்குவதற்கு மாகாண நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. குறிப்பாக அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. எனவே காணி பிணக்குகள் தொடர்பாக மாகாண மேல் நீதிமன்றம் எவருக்கும் எச் சட்டத்தின் கீழும் உத்தரவு பிறப்பிக்கலாம் என அரசியலமைப்பு குறிப்பிடுகிறது என சட்டத்தரணி சுமந்திரன் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஆராய்ந்த மன்றானது நான்கு இடைக்கால தடையுத்தரவுகளை பிறப்பித்து அதனை திறந்த மன்றில் நீதிபதி அறிவித்தார்.

இதன்படி, இக் கன்னியா வெந்நீரூற்று ஆலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் பௌத்த விஹாரை அமைப்பதற்கு இடைக்கால தடையுத்தவரவு பிறப்பிக்கப்படுகிறது.

இரண்டாவதாக, இங்கு இந்து பக்தர்கள் செல்வதற்கு எவரும் தடை ஏற்படுத்த முடியாது. அத்துடன் அவர்களிடம் ரிக்கட் அறவிட முடியாது.

மூன்றாவதாக இக் கோவில் அமைந்துள்ள பிரதேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பு நம்பிக்கை பொறுப்பாளரான கோகிலவானி ரமணி அம்மாவுக்குள்ளது. எனவே அதனை எவரும் தடுக்க முடியாது.

நான்காவதாக இவ் ஆலயத்தில் பிள்ளையார் ஆலயத்தை தவிர ஏனையவற்றை புனர்நிர்மாணம் செய்யும் அதிகாரமும் அவருக்குண்டு. அதனையும் யாரும் தடுக்க முடியாதென இந் நீதிமன்று உத்தரவிடுகிறது.

இப் பிள்ளையார் ஆலயத்தை மீளவும் அமைப்பதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது என மன்றானது உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. எனினும் இவ் வழக்கின் கருப்பொருளே அந்த விடயத்திலேயே உள்ளது. அதாவது குறித்த பிள்ளையார் ஆலயம் உள்ள மேட்டினையே தொல்பொருட் திணைக்களம் வர்த்தமாணி அறிவித்தல் மூலம் பிரகடணப்படுத்தியுள்ளது.

எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தலானது சட்டவலுவுடையதா? இல்லையா? என்பது தொடர்பாக ஆராய்ந்து இவ் வழக்கின் இறுதியில் அதற்கான தீர்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது இத் தடையுத்தரவுகளானது இவ் தடையாணை வழக்கு நிறைவுறும் வரையில் அமுலில் இருக்கும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

இம் மனுவில் எதிர்மனுத்தாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள தொல்பொருளியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் அடுத்த வழக்கு தவணையான எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் அதற்கான அழைப்பாணைகளை அனுப்பி வைக்குமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு மன்றானது உத்தரவிட்டது.

 


Add new comment

Or log in with...