அமைச்சுப் பதவிகளை ஏற்க முஸ்லிம் எம்.பிக்களிடம் பிரதமர் கோரிக்கை | தினகரன்

அமைச்சுப் பதவிகளை ஏற்க முஸ்லிம் எம்.பிக்களிடம் பிரதமர் கோரிக்கை

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வாரத்தில் தீர்வு

இன்னும் ஒரு வாரத்துக்குள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதாகவும் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த சகல அமைச்சர்களும் உடனடியாக பதவி ஏற்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் முஸ்லிம் எம்.பிகள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கவேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.இதன் போதே பிரதமர் அமைச்சு பதவிகளை ஏற்குமாறு கோரியுள்ளார்.

ஆனால், அமைச்சு பதவிகளை ஏற்பது தொடர்பில் முஸ்லிம் எம்.பிகள் எந்த அறிவிப்பும் மேற்கொள்ளாததோடு இது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேசவேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் பிற்பகல் 3:30 மணியளவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.

முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் இன்று உடனடியாக அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறும், இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார். ஆனால், கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்க்கமான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் எம்.பி.கள் தங்களது பிரதமரிடம் தெரிவித்ததாக அறிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகம் கடந்த காலத்தில் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்து தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் அல்ல என்பது உறுதியாகியுள்ளதாகவும் பிரதமர் இங்கு கூறியுள்ளார்.முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் முஸ்லிம் எம்.பிகள் தொடர்ந்தும் அமைச்சு பதவிகளை ஏற்காதிருப்பது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.கல்முனை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்த அவர், இந்த பிரச்சினை தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.இந்த பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணுமாறு அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றிரவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

முஸ்லிம் எம்.பிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பையடுத்து ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது பதவி விலகிய சகல முஸ்லிம் எம்.பிகளும் மீண்டும் அமைச்சு பதவிகளை உடனடியாக ஏற்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.(பா)

எம்.ஏ.எம்.நிலாம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...