மேலும் 22 சுற்றுலா பொலிஸ் நிலையங்களை நிறுவ நடவடிக்கை | தினகரன்

மேலும் 22 சுற்றுலா பொலிஸ் நிலையங்களை நிறுவ நடவடிக்கை

கொள்கலன்களை பயன்படுத்தி மிரிஸ்ஸவில் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா பொலிஸ் நிலையம்.

கொள்கலன்களில் அமைக்கப்பட்டு மிரிஸ்ஸவில் ஆரம்பித்து வைப்பு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, நாடளாவிய ரீதியில் 22 சுற்றுலா பொலிஸ் நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், முறைகேடுகளை கட்டுப்படுத்தி, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும்  நோக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டு பொலிஸ் சுற்றுலாப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, தற்போது நாடளாவிய ரீதியில் 11 சுற்றுலாப் பொலிஸ் பிரிவுகள் காணப்படும் நிலையில், மேலும் 22  சுற்றுலாப் பொலிஸ் நிலையங்களை நிறுவவுள்ளதாக, இலங்கை  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அச்சபை அறிவித்துள்ளது.

ஆயினும், சுற்றுலா பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்காக காணிகளைத் தெரிவு செய்வதில் சவால்கள் காணப்படுவதால், இலங்கை  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது, சிறிய இடப்பரப்பில் அமையும் வகையில் கொள்கலன்களை பயன்படுத்தி சுற்றுலாப் பொலிஸ் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அலுவலகம், தங்குமிடம் மற்றும் கழிப்பறை வசதிகளை உள்ளடக்கியதாக, 4 கொள்கலன்கள் பயன்படுத்தி அமைக்கப்படவுள்ளது.

ரூபா 5மில்லியன் செலவில் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களுடனான இவ்வாறான தொகுதியைக் கொண்ட பொலிஸ் நிலையமொன்று காலி, மிரிஸ்ஸவில் கடந்த வாரம் திறக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள்  மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிஷு கோமஸ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...