Friday, April 19, 2024
Home » சுற்றுலா வளர்ச்சிக்கு “Pekoe Trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

சுற்றுலா வளர்ச்சிக்கு “Pekoe Trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

- சுமார் 300 கிலோமீட்டர் தூர சுற்றுலாப் பாதையை அமைக்க எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
January 20, 2024 2:35 pm 0 comment

– நிலவும் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு பெறுங்கள்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “Pekoe Trail” திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

“Pekoe Trail” திட்டத்தின் கீழ், சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பாதை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இத்திட்டம் உலகளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையின் தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக அமையும் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட Pekoe Trail குழு விளக்கமளித்தது.

இலங்கையை இதுவரை சுற்றுலாத் தலமாகக் கருதாத சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு இத்திட்டம் உதவும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்கு உரையாற்றிய சாகல ரத்நாயக்க, இலங்கைக்கு மிகவும் முக்கிய திட்டமான இந்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே இத்திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் எனவும் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமானது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

அதற்கிணங்க, இத்திட்டம் தொடர்பில் பிரதேச தோட்டக் கம்பனிகள் மற்றும் ஏனைய துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அரச பெருந்தோட்டம், தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். எஸ். எஸ். பி யாலேகம, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், Pekoe Trail குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT