இருவர் சேர்ந்து தீர்மானிக்கும் வேட்பாளரை சுதந்திரக் கட்சி ஏற்க தயாரில்லை | தினகரன்

இருவர் சேர்ந்து தீர்மானிக்கும் வேட்பாளரை சுதந்திரக் கட்சி ஏற்க தயாரில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து அமைக்கும் கூட்டணி முடிவுசெய்யும் வேட்பாளரே வெற்றிபெற முடியும் என்றும் அவ்வாறின்றி ஒருவர் அல்லது இருவர் கூடி தெரிவு செய்யும் வேட்பாளரை ஏற்க சுதந்திரக் கட்சி தயாரில்லை என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

அவ்வாறு ஒருவர் இருவர் கூடி தெரிவு செய்யும் வேட்பாளருக்காக செயற்படத் தயாரில்லை எனவும் அந்தளவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடிமையாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கிடையிலான பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்குமிடையில் சாத்தியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று சில ஆவணப் பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.

இரு கட்சிகளும் இணைந்த கூட்டணியின் யாப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் இணக்கப்பாட்டுக்கு வந்து அதற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. இறுதி பேச்சுவார்த்தைக்கு முன்பதாக சில இணக்கப்பாடுகளுக்கு வரவேண்டியுள்ளது. ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதா அல்லது அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா? என அவரிடம் கேள்வியெழுப்பிய போது அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. அதற்கு நாம் அவசரப்படப் போவதும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...