36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி | தினகரன்


36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி

காணாமல்போன பதின்ம வயது பெண்:

36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி பதின்ம வயதுப் பெண் ஒருவர் தொடர்பான மர்மத்தை அவிழ்க்கும் புதிய முயற்சியில் வத்திக்கான் ஈடுபட்டுள்ளது.

எம்மானுவேல் ஓர்லண்டி என்ற அந்தப் பெண்ணின் உடல் எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் முதல் முயற்சியாக கடந்த ஜுலை 11 ஆம் திகதி இரு சமாதிகள் தோண்டப்பட்டன.

எனினும் இரு இளவரசிகளுடையது என்று நம்பப்பட்ட அந்த சமாதியில் இருந்து எந்த எலும்புகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்த மர்மம் மேலும் சிக்கலானதாக மாறியது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சிறு கல்லறை ஒன்றில் இறந்தவர்களின் எலும்புகளை வைத்திருக்கும் இரு பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு வரும் சனிக்கிழமை வரை இது தொடரும் என்று வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தாலியை உறைய வைத்திருக்கும் இந்த மர்மத்தின் முக்கிய தடயம் வத்திக்கானின் டியுடோனிக் கல்லூரியில் இருப்பதாக ஓர்லண்டியின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கல்லுௗரியை மையமாகக் கொண்டே தற்போது தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

1983 ஜுன் 22 ஆம் திகதி மத்திய ரோம் பஸ் தரிப்பிடம் ஒன்றில் எம்மானுவேல் கடைசியாகக் காணப்பட்டார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இவர் வத்திக்கான் நகர ஊழியர் ஒருவரின் மகள் என்ற கோணத்திலேயே தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Add new comment

Or log in with...