பிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான் | தினகரன்


பிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்

ஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை ஈரான் புரட்சிக் காவல்படை வெளியிட்டுள்ளது.

“ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்கும்போது சர்வதேச கடல்போக்குவரத்து விதிகளை மதிக்க தவறியதற்காக ஹோர்கோஸ்கான் துறைமுகம் மற்றும் கடல்போக்குவரத்து அமைப்பின் கோரிக்கைக்கு அமைய புட்சிப் படை மூலம் ஸ்டேனா இம்பேரோ கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது” என்று ஈரான் புரட்சிக் காவல் படை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இணைய தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் கறுப்பு முகமூடி அணிந்த ஈரானி படையினர் ஹொலிகொப்டரில் இருந்து கப்பலுக்குள் இறங்குவதை காண முடிகிறது.

அதேபோன்று ஈரானிய புரட்சிக் காவல் படையின் பல சிறிய படகுகள் பெரிய கப்பலை சுற்றிவளைத்திருப்பதையும் காண முடிகிறது. படகு மற்றும் ஹெலியில் இருந்து இரண்டு கெமராக்கள் மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 18 இந்தியர்கள் உள்பட 23 பேரும் ஈரான் இராணுவத்தின் வசம் உள்ளனர்.

ஈரானின் இந்த நடவடிக்கையை பிரிட்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் கண்டித்திருப்பதோடு தீர்க்கமான கடல் பாதையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்க அவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஈரான் சட்டவிரோதமாக கைப்பற்றிய பிரிட்டன் கொடியுடனான இந்தக் கப்பலை விடுவிக்கும்படி பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் ஜெரமி ஹன்ட் குறிப்பிட்டுள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்து இது தீவிர கேள்வியை ஏழுப்பி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய ஹன்ட், ஈரான் பதிலுக்கு பதில் செய்யும் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜிப்ரால்டாவில் பிரிட்டன் ஈரானிய கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலின் உரிமையாளரான ஸ்டீனா பல்க் என்ற சுவீடன் நாட்டு நிறுவனம், கப்பலுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்மூஸ் சர்வதேச கடல்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இந்தக் கப்பலை நோக்கி சிறிய அளவிலான கடற்படை கப்பலும் ஹெலிகொப்டரும் வந்த பின்னர் கப்பலின் திசை மாறியது. அந்த கப்பல் வடக்கு நோக்கி ஈரானிற்கு சென்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநரான எரிக் ஹநேல், கப்பல் குழுவில் 23 பேர் இருந்தனர் என்றும் குழுவினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் பேசியுள்ளார்.

“இந்த சூழலை விரைவாக சரிசெய்ய ஐக்கிய இராச்சியம் மற்றும் ஸ்வீடன் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உள்ளோம். மேலும், குழுவினரின் குடும்பத்தாருடனும் தொடர்ந்து பேசிவருகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒமானிய கடல் பகுதியில், பிரிட்டன் கொடியைக்கொண்டு சவூதிக்கு சென்றுகொண்டிருந்த கப்பலை பிடித்த, இந்த சம்பவம் என்பது வளைகுடா பகுதியில் அண்மையில் நடந்த சம்பவங்களின் நிலையில் மேலும் தீவிரமான ஒரு நிலைக்கு மாற்றியுள்ளது.

அண்மையில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டின் ஆளில்ல விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன் மேலும் ஒரு பிரிட்டன் கொடி ஏந்திய கப்பலை பிடிக்கும் சூழல் ஏற்பட்டது என பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

எனினும் அமெரிக்கா போலன்றி ஈரான் மற்றும் பிரிட்டன் இடையே பதற்ற சூழல் நீடிக்கவில்லை. ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் பிரிட்டன் தொடர்ந்து நீடிப்பதோடு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அந்த நாடு முயற்சித்து வருகிறது.

எனினும் ஜிப்ரால்டாவில் ஈரானிய கப்பல் ஒன்றை பறிமுதல் செய்ய பிரிட்டன் உதவியது. அந்தக் கப்பலை தொடர்ந்து தடுத்து வைத்திருக்க ஜிப்ரால்டா நிர்வாகம் கடந்த வெள்ளியன்று ஒப்புதல் அளித்தது. அந்தக் கப்பல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்வதாக சந்தேகத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்க பதிலடியாக பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஒன்றை பறிமுதல் செய்வதாக ஈரான் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பதாகவும், இராணுவத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் பிரிட்டன் அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தை, ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு பிரிட்டன் கொண்டு சென்றுள்ளது.


Add new comment

Or log in with...