Friday, March 29, 2024
Home » போக்குவரத்து சட்ட நடைமுறையை வலுப்படுத்த மற்றொரு வேலைத்திட்டம்

போக்குவரத்து சட்ட நடைமுறையை வலுப்படுத்த மற்றொரு வேலைத்திட்டம்

by manjula
January 20, 2024 6:00 am 0 comment

நாட்டில் வீதி போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்துள்ளன. மோட்டார் போக்குவரத்து திணைக்களத் தரவுகளின் படி, 83 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நாட்டில் உள்ளன. அவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்டவை மோட்டார் பைசிகிள்களாகும்.

அதேபோன்று வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களும் நாட்டில் அதிகரித்தே காணப்படுகின்றன.

வருடமொன்றுக்கு 2300 க்கும் மேற்பட்டவர்கள் வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் காரணமாக மரணமடைவதாகக் குறிப்பிட்டுள்ள மோட்டார் போக்குவரத்து பொலிஸார், நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு 10 வீதி விபத்துக்களுக்கும் ஒரு உயிரிழப்பு இடம்பெறுவதாகவும் அதுவும் மூன்று மணித்தியாலயங்களுக்கு ஒரு மரணம் என்றபடி பதிவாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் வாகன விபத்துக்களால் மரணங்கள் மாத்திரமல்லாமல் கடுங்காயங்களும் கூட ஏற்படவே செய்கின்றன. அவ்வாறான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதிக செலவுகள் ஏற்படக்கூடியன. ஏனெனில் இவ்வித விபத்துக்களினால் ஏற்படக்கூடிய பெரும்பாலான காயங்கள் உடம்பில் முகம் உள்ளிட்ட அதிக உணர்திறன் கொண்ட பகுதிகளில் ஏற்படுவதே இதற்கு காரணமாகும். அதனால் வாகனங்களை வீதிப் போக்குவரத்து சட்டங்களை மதித்து பொறுப்புடன் செலுத்த வேண்டியது சாரதிகளின் பாரிய பொறுப்பாகும்.

இருந்தும் கூட கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டில் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 451 வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சனத்தொகை அடிப்படையில் நோக்கும் போது இந்நாட்டில் வீதி விபத்துக்களும் அவற்றின் விளைவான மரணங்களும் காயங்களும் அதிகம். அதுவே மக்களின் கருத்தாகும். அதனால் வீதி விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல தரப்பினரும் கவனம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வீதி போக்குவரத்து வாகன விபத்துக்களைக் குறைக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபடக்கூடியவர்களாக உள்ளனர்.

பொதுவாக இந்நாட்டில் பதிவாகும் பெரும்பாலான வீதி போக்குவரத்து வாகன விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது வீதி விபத்துக்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம்.

இந்நாட்டில் பதிவாகும் பெரும்பாலான வாகன விபத்துக்கள் வீதி போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான சட்டங்களை மதியாமை, வாகனங்களை வேகமாகவும் போட்டி போட்டு முந்திச் செல்ல முயற்சிக்கும் வகையில் செலுத்துதல், போதைப்பொருட்களைப் பாவித்த வண்ணம் வாகனங்களை செலுத்துதல் என்பன காரணமாக இடம்பெறுபவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான் இவ்விதமான விபத்துக்களைக் குறைத்து கட்டுப்படுத்தும் நோக்கில் வீதி போக்குவரத்து சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டும் உள்ளன. அப்படியிருந்தும் இவ்விதமான விபத்துக்கள் குறைந்ததாக இல்லை.

இந்நிலையில் தான் வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விஷேட வேலைத்திட்டமொன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடானது வாகனங்கள் அதிகரித்து காணப்படும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முதலில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

‘இத்திட்டத்தின் ஊடாக வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்கள் சி.சி.ரி.வி கமெரா கட்டமைப்புக்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட உள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ள பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், ‘தவறிழைப்பவர்களுக்குரிய அபராத பற்றுச்சீட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாக அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றுள்ளார்.

இந்த ஏற்பாட்டின் ஊடாக வாகன சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் வீதிப் போக்குவரத்து சட்ட ஏற்பாடுகளை மதித்து வாகனங்களைச் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தவிர்த்துக் கொள்ள முடியாத கட்டாயப்படுத்தாகும்.

இவ்வேலைத்திட்டத்தின் நிமித்தம் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஏற்கனவே சி.சி.ரி.வி கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

வீதிப் போக்குவரத்து சட்டங்கள் மீறப்படுவதைக் கட்டுப்படுத்தவென முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டம் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியதாகும். மக்களின் கருத்தும் அது தான். இதன் ஊடாக வீதிப் போக்குவரத்து சட்டங்கள் மீறப்படுவதைப் பெரும்பாலும் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்திற்கு வாகன சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். தாம் செலுத்தும் வாகனத்தில் தாம் மாத்திரம் பயணிப்பதில்லை. தம்முடன் பலர் பயணிப்பதை சாரதிகள் மனதில் கொண்டவர்களாக வாகனங்களை செலுத்த வேண்டும். அப்போது பெரும்பாலான வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள முடியும். அதுவே நாட்டினதும் மக்களினதும் தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT